திங்கள், 30 மார்ச், 2009

கம்பன் அடிப்பொடி எழுதிய ராஜராஜன் திருமுறை கண்டது என்ற தலைப்பிலான கட்டுரையின் சிறுபகுதி



அப்பர், சம்பந்தர் , சுந்தரர் ஆகிய முவர் முதலியவர்களால் பாடப் பெற்ற தேவாரத் திருமுறைகள் தில்லையம்பதியில் அடைபட்டுக்கிடந்தவற்றை நம்பியாண்டார் நம்பியார் பேருதவியால் கண்டு வெளிப்படுத்தியவன் நம் இராஜராஜனே. அப்பணியில் பண்சுமந்த பாடல்களும், தமிழும், சிவநெறியும், பக்தித்துறைதயும் பெற்ற பேறு அளப்பரியதாம். கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருமுறை கண்ட புணம் ஓரளவு அப்பெரும் பணியைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதில் இராஜராஜன் "உலகம் மகிழ்தரு `சையம்'மீது தோன்றி ஓவாது வரு பொன்னி சூழ் சோணாட்டின் திலகம் என விளங்கும் மணி மாட ஆருர்த் தியாகேசர் பதம் பணிநது செங்கோல் ஓச்சி அலகு இல் புகழ்பெறு ராசராச மன்னன் அபயகுல சேகரன்'' என்று அருமையாகக் குறிக்கப்பெறுகிறான். கதை இதுதான் : சிவபெருமான் மீது எல்லையில்லாபக்தி பூண்டொழுகியவன் இராஜராஜன். ஒருநாள் தேவாரப் பாசுரங்களில் சிலவற்றை ஓதக் கேட்டான். செவிக்குத் தேனென இனித்த அப்பாக்கள் அவன் உள்ளத்தில் பாய்ந்து மெய் புளகிக்க, விழிநீர் அருவிபாய, ஒப்பரிய ஓர் உணர்ச்சியை விளைத்தது. பாடியோரைக் கேட்டான். அவர்கள் அறிந்தவாறு எடுத்து உரைத்தார்கள். ஏனைய பல்லாயிரம் பாசுரங்கள் இருக்குமிடமெது எனக் கேட்க பிறவற்றின் இருப்பிடம் யாதெனப் புலப்படுத்த அவர்களால் இயலவில்லை.

மிக்க ஆர்வத்தனாய் நாடெல்லாம் தேட ஆணையிடுகிறான். அப்படியும் அவை கிடைத்தபாடில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் திருநாரையூரில் ஆதிசைவ மரபில் தோன்றிய நம்பியாண்டார் நம்பிகள் அவ்வூர்ப் பொல்லாப் பிள்ளையாரை அழுது படையலை உண்ணச் செய்யும் அற்புதம் நிகழ்த்தியும் அவர்பால் தமருடன் வளர்தரு சதுர் மறைகளைக் கேட்டு உணர்த்தும் வருதலை இராஜராஜன் கேள்விப்படுகிறான். முக்கனிகளும், பால், தேன் முதலிய பற்பல உண்டிகளும் எடுத்துக் கொண்டு திருநாரையூருக்கு மல்லல் மிகு சேனையுடன் இராஜராஜன் மன்னனும் வந்து சேர்ந்தான். வந்த மக்களையும் பண்டங்களையும் எடுத்துரைத்து அனைத்தையும் இப்பொழுதே அவனுக்கு படைத்தருள்க என வேண்டி நின்றான். நம்பி வினாயகனை அடிபணிந்து அனைத்தையும் உண்டருள வேண்ட ஒன்றுவிடாமல் உண்டருளினார் பொல்லாப் பிள்ளையார். இந்த அற்புதத்தைக் கண்டு மெய் அரும்பி, உளம் நெகிழ்ந்து, விழிநீர் சோர வியந்து மகிழ்ந்து நின்ற மன்னர் மன்னன், இவர் உதவியால்தான் திருமுறைதகளின் இருப்பிடத்தை அறிய முடியும் என்ற முடிவுற்கு வந்தான். முவர் அருளிய திருமுறைகளை வேண்டி நின்றான். நம்பிகளோ கண்ணீர் மல்கி, உள்ளம் கசிந்துருகி, பிள்ளையார் அடிபணிந்து முவர் தமிழ் இருந்தவிடம் தெரிந்தருள்க என, பொல்லாப் பிள்ளையார் தில்லைச் சிற்றம்பலத்தின் புறக்கடையின் பக்கம் கைமுத்திரையிட்ட அறையினுள்ளே அவை உள என உரைத்தார். கேட்ட மன்னன் கிளர்ந்தெழு மனத்தினனாகி, திருச்சிற்றம்பலத்தை அடைந்து மறையோர்கள் பலருக்கும் "கணபதி கூறியது இது'' என்று நிகழ்ந்ததை எடுத்துரைத்தான். தில்லைவாழ் அந்தணர்களோ அவற்றைச் செய்து வைத்த முவர் வந்தாலன்றி அறையைத் திறக்க முடியாது எனக் கூறினார்.

நுண்ணறிவு மிக்க இராஜராஜன் கூத்து வல்லானுக்குரிய ஆதிரைத் திருநாள் அன்று பெருவிழாவை எடுத்துத் தமிழ் விரகர் முவர் தமிழ் இருக்கும் அறையின் முன் கொணர்ந்து "முவரும் வந்தாயிற்று. இனி அறை திறக்கப்படலாம்'' என ஆணையாக வெளிப்பட்டது இராஜராஜன் குரல். வேறு வழியின்றி அறைக்கதவு அந்தணர்களால் திறக்கப்பட்டது. ஏடு இருந்த இடத்தில் எழும்பியிருந்தது கரையான் புற்று. மன்னன் மாதுயரம் உற்றான். மண் செறிவை எல்லாம் நீக்கி தைலக்குடங்கள் பலவற்றைச் சொரிந்து செல்மடியச் செய்து திரு ஏடுகளை எடுக்க, அளவற்ற ஏடுகள் அழிந்து பயனற்றதாய் விளங்கக் கண்டு உள்ளம் நைந்து அழுது புலம்பி அயர்ந்தது நின்றான். அப்போது "சைவநெறித் தலைவரெனும் முவர் பாடல் வேய்ந்தனபோல் மண்முடச்செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம்'' என்று ஓர் அசரீரி ஒலித்தது. அதைகேட்ட மன்னன் மண்டிய துயரம் மாற மகிழ்ச்சியுற்று நம்பியாண்டார் நம்பி அடிகள் முடி சேர்த்து நன்றிப் பெருக்கைப் புலப்படுத்தினான். சிவனடியார்க்கெல்லாம் உதவுக என்று தனது பண்டாரத்தைத் திறந்து விட்டான்.

நன்றி : மா. திருநாவிற்கரசு (பதிப்பாசிரியர்), சித்தியவான் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா மலர். 01.06.2008

வியாழன், 19 மார்ச், 2009

கம்பன் திருநாள்


இந்த ஆண்டு காரைக்குடி கம்பன் திருநாள் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதன் முன் நிகழ்வாக காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் கம்பன் அடிப்பொடி நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவை கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாக்குழுவினர் நடத்துகின்றனர். இவ்விழாவில் நீதிபதி இலக்குமணன் அவர்கள் தலைமை ஏற்கிறார்கள். கம்பன் கலைக் களஞ்சியுத்தையும் அவர்கள் வெளியிடுகிறார்கள். தொழிலதிபர் ஏ.சி. முத்தையா அவர்கள் இப்புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் மாண்புமிகு ப. சிதம்பரம், மாண்புமிகு இரகுபதி, மாண்புமிகு இராசா, தமிழக அமைச்சர் மாண்புமிகு பெரிய கருப்பன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுச் சிறப்பிக்கின்றனர். குமுதம் இதழ்க் குழுமங்களின் தலைவர் ஜவகர் பழனியப்பன் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டுப் பெருமைப்படுத்துகிறார்கள். மேலும் தோழர் தா.பாண்டியன் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்கள். திருமிகு இராஜேஸ்வரி நடராஜன், கணபதி ஸ்தபதி ஆகியோர் கம்பன் அடிப்பொடியாருடனான நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 6,7,8 தேதிகளில் கம்பன் திருநாள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நிகழ்கிறது. ஏப்ரல் ஒன்பதாம் தேதி நாட்டரசன் கோட்டையில் இவ்விழா தொடர்கிறது.

முதல் நாள் அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) (இவர் திருச்சி ராதாகிஷ்ணன் அவர்களின் மாணவர்) மற்றும் திருமிகு சாரதா நம்பி ஆருரன் (இவர் தற்போது தமிழ்நாடு அரசின் தகவல் ஆணையர் பதவியில் இருக்கிறார்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் கம்பன் அடிசூடி அவர்கள் ஏற்படுத்தியுள்ள மீனாட்சி பழனியப்பன் அறக்கட்டளைப் பொழிவினை சொல்லரசி இளம்பிறை மணிமாறன் அவர்கள் கம்பனில் எண்ணமும் வண்ணமும் என்ற தலைப்பில் ஆற்ற உள்ளார்கள். இவ்விழாவிலேயே இவ்வுரை புத்தகமாகவும் வெளிவருவது புதுமை. இதனை திருமிகு ஜவகர் பழனியப்பன் அவர்கள் வெளியிட இருக்கிறார்கள்.

அடுத்த நாள் (ஏப்ரல் 7) நிகழ்வில் திருமிகு கண. சிற்சபேசன் தலைமை ஏற்க திரு தெ. ஞானசுந்தரம் அவர்களும், இலங்கை ஜெயராஜ் அவர்களும் பங்கேற்கும் உரைக்கோலம் நடைபெற உள்ளது.

அடுத்த நாள் நிகழ்வில் ( ஏப்ரல் 8) திருமிகு நெல்லைக் கண்ணன் தலைமை ஏற்க பட்டி மண்டபம் நடைபெற உள்ளது. திருவாளர்கள் அப்துல் சமது, பழ. முத்தப்பன் ஆகியோர் இதனுள் வாதாட உள்ளனர்.

நாட்டரசன் கோட்டையில் இலங்கை ஜெயராஜ் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாக்களுக்கு வந்து இருந்து கம்பன் கவி அமுதைச் சுவைக்க அன்போடு கம்பன் கழகத்தார் அழைக்கின்றனர். வருக. வருக. வளம் சேர்ப்போம்.

கம்பன் அடிப்பொடிநூற்றாண்டு விழா அழைப்பிதழ்

அழைப்பிதழ்களைச் சொடுக்கினால் முழு அளவுள்ள அழைப்பிதழ் உங்களின் பார்வைக்கு வரும்


புதன், 18 மார்ச், 2009

கம்ப இயக்கம் கம்பனடிப்பொடி

சா.கணேசன் என்ற இயர்ப்பெயர் கொண்ட கம்பன் அடிப்பொடி அவர்கள் சா.க என முதல் எழுத்துக்கள் கொண்டும் அழைக்கப்பெற்றார். சா.க. சாகா வரம் பெற்று கம்பனின் பெருமை நினைவு கூரப் பெறும் இடமெல்லாம் இன்று நினைக்கப்படுகிறார். கம்பனின் விழாவை நடத்துவதற்கு அவர் ஏற்படுத்திய சிறு பொறி இன்று பெருந்தீபமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழகத்தில் கம்பனுக்கும், இராமயணத்திற்கும் எதிர்ப்புகள் பல தோன்றியபோதும் அதே காலத்தில் கம்பனையும், இராமாயணத்தையும் ஒப்பற்ற இலக்கியமாக மக்களிடம் கலைவடிவில் சென்று சேரச் செய்த பெரும்பணி இவரைச் சேரும். கம்பனை எதிர்த்த, இராமாயணத்தை எதிர்த்த கூட்டத்தாரை எல்லாம் எண்ணி அழைத்து வந்து அவர்கள் வாயினாலேயே கம்பனைப் பேசவைத்துக் கம்பனை நிலைநாட்ட வைத்த இவரின் பெரும்புகழ் என்றும் நினைக்கத்தக்கது.

பெயரளவில் நடத்தப்படும் விழாக்களைக் கண்டு சோர்ந்து போயிருக்கும் இக்காலச்சூழலில் காரைக்குடி கம்பன் விழாவின் செய்நேர்த்தித் தன்மை இன்றளவும் நம்பமுடியாததாகவே இருக்கிறது. பெரும்விழாவை முன்நின்று நடத்த என்ன என்ன தேவையோ அத்தனையையும் அரும்பாடுபட்டுச்சேர்த்து கம்பன் அடிப்பொடி அவர்கள் தனி ஒரு மனிதராகவே கம்பன் விழாவை நடத்தி வந்திருக்கிறார் என்ற பின்னணியில் எண்ணிப் பார்த்தால் மட்டுமே அவர் ஒரு இயக்கமாய் இருந்திருக்கிறார் என்பது புரிய வரும்.

சட்டை தரிக்காமல், கொள்கைத் தெரிப்போடு அவர் நடத்திய கம்பன் விழாக்கள் இன்றைய விழா அமைப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள். நேரந்தவறாமல் "கம்பன் வாழ்கவாழ்க, வாழ்க, கன்னித்தமிழ் வாழ்க வாழ்க, வாழ்க'' என்ற அவரின் தொடக்க முழக்கம் அவர் கொள்கையின் பதாகையாகவும் இருந்தது. நேரத்தினைத் திருத்திக்கொள்ளவும் உதவியது.

மேடைகளில் ஒழுங்கு கண்ட அவர் மேடைப்பேச்சாளர்களிடம் நெறிமை, பொருண்மை, நாகரீகம் முதலானவற்றை எதிர்பார்த்தார். சற்றும் குறைந்தவர்களைத் தள்ளி ஒதுக்கி வைத்தார். இவரது தாய் மேடையான காரைக்குடி கம்பன் கழக மேடைகளில் வலம் வந்ததவர்களே கம்பனைப் பேசத் தகுதி பெற்றவர்கள் ஆனார்கள். இங்கு சாதி, மதம், வேறு பாகுபாடுகள் எதுவும் இல்லை. கம்பன் மட்டுமே கருப்பொருள்.

இத்தகைய கம்ப இயக்கம் தோன்றுவதற்கு அவருக்குள் இருந்த கம்ப ஈடுபாடு காரணம். இளமைக்காலம் தொட்டே இவரது இல்லத்தில் இராமாயணம் படித்தல் என்ற முறைமை இருந்துள்ளது. அந்த விழாவே கம்பனை அறிமுகம் செய்து இவருக்குக் கம்பன் விழாவை எடுக்கத் தக்கக் கருவைத் தந்துள்ளது.

இவர் காரைக்குடி சாமிநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி ஆகியோர்க்குப் புதல்வராக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில் பிறந்தார். இன்றைக்கு நாம் மகிழ்வோடு அவரின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இளமையில் செல்வம் சேர்க்கும் நோக்கோடு இவர் பர்மா சென்றார். இருப்பினும் இந்திய நாட்டின் விடுதலை, காந்தியின் மேல் கொண்ட ஈடுபாடு போன்றவற்றால் கவரப் பெற்று பொருளாசையைப் பின்தள்ளி, கொள்கைப்பிடிப்பினை ஏற்று இவர் இந்தியா திரும்பினார். இதன்பின் இவர் காந்தியக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு அதன்வழி நடப்பதை இலக்காகக் கொண்டார். காந்தியடிகளின் காரைக்குடி சார்ந்த பயணங்களுக்கு இவரே வழிகாட்டி. நேரங்காப்பாளர். காந்தியடிகளும் ஜீவாவும் சிறாவயலில் சந்தித்து உரையாடியபோது உரையாடலில் உடன் பங்கு பெற்றவர் இவர்.

விடுதலைப்போரில் சிறை சென்று தாய்நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்நாட்களை ஈந்த பெருமகனார் இவர். அலிபுரம் சிறையில் இவர் சில மாதங்கள் சிறைவாசம் பெற்றுள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டு வாக்கில் பதினெட்டு மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். விடுதலை பெறுவதற்கு முன்பேயே பல இலக்கிய அமைப்புகளை இவர் தொடங்கியுள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டில் இவர் தொடங்கிய கம்பன் கழகம் ஏறக்குறைய இன்றைக்கு எழுபது ஆண்டுகளை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகின்றது. விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலிலும் இவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதில் ராஜாஜி சுந்திரா கட்சியை நிறுவியபோது இவர் முக்கிய பொறுப்புகளை மாநில அளவில் வகித்தார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டாம் ஆண்டில் இவர் சட்டமன்றப் பேரவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் அரசியல் பணியும் இவ்வகையில் சிறப்புற்றது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு முதல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு வரை இவர் தமிழகச் சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக இருந்துத் தொண்டாற்றினார்.
இவருடன் இணைந்து கம்பன் கழகம் உருவாகக் காரணமானவர்கள் இருவர். ஒருவர் சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா. மற்றொருவர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கனார்.

இவர் ஏற்றி வைத்த கம்பதீபம் இன்றளவும் பல்கிப் பெருகி சுடர் பெருக்கி வருகின்றது. இன்றைய நல்ல பேச்சாளர்கள், சென்ற தலைமுறையின் தமிழறிஞர்கள் இந்தக் களத்தில் விளைந்தவர்களே ஆவர்.
அக்காலத்தில் காரைக்குடிக் கம்பன் கழகத்தின் முத்திரைப் பேச்சாளர்களாக விளங்கியவர்கள் பலர் ஆவர். அவர்களுள் குறிக்கத்தக்கவர்கள் நீதிபதி மகராசன், நீதிபதி மு. மு. இஸ்மாயில், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், ஏ.சி. பால்நாடார், க. கு கோதண்டராமன்,எஸ். ராமகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தம், ஜீவா போன்றோர் ஆவர்.
திருச்சி பெரும்புலவர் இராதா கிருஷ்ணன், கம்பராசன், கண்ணதாசன், புலவர் கீரன், புதுவைக் கம்பன் கழகச் செயலர் அருணகிரி போன்றோர் எனக்கு நினைவில் இருக்கும் சென்ற காலச் சான்றோர் ஆவர்.
இன்றைக்குக் களத்தில் விளங்குகிற திருவாளர்கள் சுகி. சிவம், அறிவொளி, சத்தியசீலன், சாலமன் பாப்பையா, அ.வ. இராசகோபால், பழ. முத்தப்பன், இலங்கை ஜெயராஜ், மாது போன்றோர் நினைவிற்குவரும் தற்காலப் பேச்சாளர்கள் ஆவர்.
முனைவர் சரசுவதி இராமநாதன், இளம்பிறை மணிமாறன், சாரதா நம்பியாருரன், சுதா சேஷய்யன் ஆகியோர் கம்ப மேடைகள் தந்த வாய்ப்புகளால் வளர்ந்தவர்கள் என்பதில் அவர்களுக்கும் பெருமை. கம்பன் கழகத்திற்கும் பெருமை.

சென்னை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ராஜபாளையம், தேரெழுந்தூர், வேலூர், கோயம்புத்தூர், ராசிபுரம், சேலம், விழுப்புரம் போன்ற பல தமிழக ஊர்களின் தற்போது கம்பன் கழகங்கள் விழாக்களை நடத்தி வருகின்றன. புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசத்தில் கம்பன் பெயரால் உள்ள கலையரங்கில் கம்பன் விழா ஆண்டுதோறும் அரசு சார் விழாவாக நடைபெற்று வருகின்றது. இதுதவிர இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் கம்பன் கழகம் காலூன்றி வெற்றிநடை போட்டு வருகின்றது.

கம்பன் கழகம் புதிதாக ஓரிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றால் அவ்விடத்திற்குக் காரைக்குடிக் கம்பன் கழகத்தின் தாய்ச் சீர்வரிசை இன்றளவும் சென்று வருகின்றது. இது தாய்க்கழகத்தின் பெருமை. சேய்க்கழகத்திற்குக் கிடைக்கும் கௌரவம். படிக்கின்ற ஒவ்வொருவர் ஊரிலும் கம்பன் கழகம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் அதில் உறுப்பினராவோம். கம்பனடிப்பொடியை நாம் நேசிப்போம். கழகம் இல்லை எனில் உடனே தொடங்குவோம்.

கம்பன் அடிப்பொடி நல்ல சுவைஞர். மேடைப்பேச்சாளருக்கு அவர் ஒரு நக்கீரர். மேடைப்பேச்சாளர் நெறிமை தவறுகையில் இவரின் நக்கீர விளையாட்டு அரங்கேறும். பேச்சாளர்கள் இது கருதியே உழைத்து கம்பன் கழக களங்களுக்குப் பேச வந்தனர்.

கம்பன் அடிப்பொடி நல்ல ஆய்வாளர். இவரின் பிள்ளையார்பட்டி தலவரலாறு அடிப்படையில் ஒருகல்வெட்டு ஆராய்ச்சி நூல். பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையாரைச் செதுக்கிய சிற்பியை வெளிக்கொணர்ந்த ஆராய்ச்சியாளர் இவர். இதனடிப்படையில் இக்கோயில் தோற்றுவிக்கப் பெற்ற ஆண்டினை வரையறுத்து இவர் அளித்துள்ளார். இவரின் மற்றொரு ஆராய்ச்சி கம்பனின் இறுதிநாள்கள் பற்றியது. இது குறித்து இவர் பல ஆய்வுகள் மேற்கொண்டு நாட்டரசன் கோட்டையை கம்பனின் இறுதி இடமாகக் காட்டினார். அது ஏற்கப் பெற்று இன்றளவும் ஒருநாள் கம்பன் விழா அங்கு நடைபெற்று வருகிறது. அதுபோல துல்லியமாக கம்பன் அரங்கேற்றிய கம்பராமாயண நாளை வெளிவுலகிற்கு அளித்த பெருமானும் இவரே ஆவார். இராசராசன் கல்வெட்டு ஆராய்ச்சி, சிற்பச் செந்நூல், கல்சொல்லும் கதை, தமிழ்த்திருமணம் ஆகியன இவரின் பிற நூல்களாகும்.

இதுதவிர அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் பல ஒன்று சேர்க்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. தொகுக்கப்படும் அக்காலம் வரும். கம்பனடிப்பொடியின் எழுத்துக்கோவைகள் ஒரே நூலாக நம் கைகளில் தவழும் நாள் வெகு விரைவில் வரவேண்டும்.

இவரைப் பாராட்டி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டில் நீதிபதி மகாராசன் அவர்கள் "கம்பன் அடிப்பொடி '' என்ற பட்டத்தை வழங்கினார்.
இவர் 28.7.1982 ஆம் நாளில் இயற்கையோடு இணைந்தார்.

கம்பன் வாழ்க, கம்பன் புகழ் வாழ்க... கன்னித்தமிழ் வாழ்க. கம்பன் அடிப்பொடி வாழ்க.

கட்டுரை எழுத உதவிய நூல்கள்
1. டாக்டர் சே. குமரப்பன், சிவகங்கை மாவட்டத் தகவல்களஞ்சியம், மல்லிகை பதிப்பகம், தேவகோட்டை
2. வெற்றியூர் அரு. சுந்தரம், நகரத்தார் பெருமை, மணிமேகலை பிரசுரம், சென்னை, 2007

ஞாயிறு, 8 மார்ச், 2009

கம்பனின் வெற்றி


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் தான் பார்த்து வருகிறது. ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களின் மன உணர்வோடு தான் சிறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆயுள்தண்டனை பெற்று சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏகாம்பரம் நாளிதழ்களில் வரும் நூல் விமர்சனத்தில் கம்பன் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ராமன் தரிசனம் நூலினை பற்றி படித்து விட்டு அந்த நூல்களை கேட்டு கம்பன் கழகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தைக் கண்ட கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா கம்பனின் வாழ்வியல் நெறிகள், இராமனைச் தரிசிப்போம், சரணடைவோம் போன்ற நூல்களை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நூல்களை படித்து விட்டுத் தான் மனம் உருக கடிதம் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்தாலும் அஞ்சல் வழியாக தமிழ் இலக்கியம் இளங்கலை பட்டம் இறுதியாண்டு பயின்று வருவதாகவும் இக்கைதி தெரிவித்து இருக்கிறார்.
சிறை வாழ்க்கை வாழும் எங்களுக்கு ராமாயணமும், மகாபராதமும் தான் விருப்பமான காவியங்கள். சிறை வாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒரு வகையில் தொடர்பு உண்டு என்று தான் ஆயூட் தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள். நம்புகின்றோம். இராமனின் கானக வாசம் 14 ஆண்டுகள். மகாபாரதத்திலே பாண்டவர்களின் கானக வாசமும் 14 ஆண்டுகள். இந்தியாவில் ஆயூட் தண்டனை சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே. சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும் போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களின் இந்த சிறை வாசம் தூசுக்கு சமமானது. ஆறுதலும், தேறுதலும் அவற்றை படிக்கும் பொழுது எங்களுக்கு ஏற்படுகிறது.
பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப்படைப்புகள் அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் என பல்வேறு முகங்களாய் வரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறார். கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருந்தவாக அமைந்துள்ளது என கைதி ஏகாம்பரம் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக நூல்களை படிப்பவர்கள் இப்படி ஆழமாக கடிதம் எழுதியதில்லை. ஒரு சிறைச்சாலையில் இருக்கும் ஒரு ஆயுள்தண்டனை கைதியை ராமாயணமும், மகாபாரதமும் இந்த விதத்தில் பாதித்திருப்பதை ஆச்சர்யமாகவே பார்ப்பதாக சொல்லும் ராஜபாளையம் கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா இக்கைதியின் கடிதம் குறித்து சொல்லும் பொழுது.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராமபாதையை இயற்றினார். அவரது எண்ணத்தை, லட்சியத்தை நிறைவேற்றத் தான் ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தை ஆரம்பித்தோம். இந்த கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் கம்பனுக்கு விழா எடுத்து வருகிறோம். அதே சமயத்தில் கம்பனைப் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து மாணவ, மாணவிகளிடையே கம்பனின் பெருமையை சென்றடைய வைத்து வருகிறோம். இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், பின்னால் பெரிய உயர் பதவிகளில் சென்றதை கடிதங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். மக்களிடையே கம்பனை பற்றிய விழுப்புணர்ச்சியை உருவாக்க ஆண்டு தோறும் பல நூல்களை வெளியிட்டும் வருகிறோம். இந்த நேரத்தில் ஒரு சிறையில் இருக்கும் ஒரு ஆயூள் தண்டனைக் கைதி எங்களின் நூல்களை கேட்டுப் பெற்று, படித்து கடிதம் எழுதியதை பார்த்து உண்மையில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களது பணி சிறைச்சாலைக்கு உள்ளேயும் சென்றிருக்கிறது.
சிறு வயதிலேயே இந்த நூல்களை எல்லாம் நாங்கள் படித்திருந்தால், இன்று சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டோம் என அவர்கள் கடிதம் எழுதுகிற பொழுது அவர்களை சிறு வயதில் வழி நடத்த சரியான ஆட்கள் இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. மன ஓட்டம், சிந்தனை வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டோமே, எப்படி வெற்றி அடைவது என்ற ஆதங்கம் தான் அந்தக் கைதிக்கு இந்த மாதிரியான நூல்களை படிக்க ஆதாரமாக இருந்திருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் பொழுது நிச்சயமாக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்கிறார்.
www.tamiloviam.com/unicode/01180708.asp

'கம்பனடிப்பொடி' சா.கணேசன்

செட்டிநாடுப்பகுதியைச் சேர்ந்த இரு நிலப்பகுதிகளை கானாடு அல்லது கானநாடு என்றும் கோனாடு என்றும் அழைப்பார்கள். கானாடுகாத்தான் என்ற ஊர்கூட இருக்கிறது. கானாட்டின் வடக்கில் இருப்பது கோனாடு. கானாடு, கோனாடு ஆகிய இருநாட்டிலும் வாழ்ந்த இருபத்துநான்கு கோட்டத்து வேளாளர்கள்தாம், வேளாளரைச் சிறப்பித்து 'ஏர் எழுபது' என்னும் நூலைக் கம்பரை இயற்றச்செய்து, அரங்கேற்றி, பரிசில்களும் வழங்கினர். பொன்னமராவதி என்னும் கோனாட்டைச் சேர்ந்த ஊரின் தலைவராகிய பொய்சொல்லாதேவன் என்னும் கள்ளர் மரபினரின் தலைவரிடம் இதுகுறித்து ஒரு சாசனம் இருந்தது. புதுக்கோட்டை அரசினரிடம் அந்த சாசனம் சேர்ப்பிக்கப்பட்டது. கம்பர் தன் இறுதிக்காகாலத்தில் செட்டிநாட்டில்தான் இருந்தார் என்று நம்பப்படுகிறது. கானாட்டின் முக்கிய ஊர்களில் ஒன்று நாட்டரசன்கோட்டை. அங்கு 'கண்ணுடையநாயகியம்மன்' கோயில் என்ற அம்பிகை கோயில் இருக்கிறது. அந்த ஊரையும் கம்பனையும் சம்பந்தப்படுத்துவார்கள். கம்பன் அடங்கிய இடம் என்று அதனைச் சொல்வார்கள். அங்கு கம்பன் அடங்கிய இடமாகக் குறிக்கப்படும் நடுகல்லுடன் கம்பன் செய், கம்பன் குளம், கம்பன் ஊருண்ணி என்ற பெயர்களும் வழங்குகின்றன. 1775இல் முத்துநாயகப்புலவர் என்பவர் 'கண்ணுடையநாயகியம்மன் பள்ளு' என்ற சிறு பிரபந்தத்தைப்பாடியுள்ளார்.. அதில் ஓரிடத்தில், 'வாசமான தென்பாண்டி நன்னாடு மதுரை நாட்டில் வளருமிந்நாடு காசினிக்குள் கதிர்க்கின்ற நாடு முன்கம்பர் வந்து துதிக்கின்றநாடு. பூசுரர்க் கன்னதானம் செய்நாடு புலவர் மேல்அபிமானஞ் செய்நாடு ராசலட்சுமி கண்ணுடை யாள்அருள் நல்கு நாட்டரசன் கோட்டை நாடே.' அந்தத்தொடர்பால் கம்பன் விழா சமயத்தில் அங்கும் ஒரு விழா நடக்கும். கம்பன் விழாவை முதன்முதலில் தோற்றுவித்தவர் 'காரைக்குடி கம்பன்' என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்த 'கம்பனடிப்பொடி' சா.கணேசன் அவர்கள். வரலாற்றாராய்ச்சிப் பேரறிஞர்; மிகச்சிறந்த தமிழறிஞர். தேசத்தியாகி. பாரதம் சுதந்திரம் அடையும்வரை சட்டையே போடுவதில்லை என்ற விரதத்தை மேற்கொண்டவர். பாரதவிடுதலைக்குப் பிறகும்கூட சட்டை போடாமலேயே இருந்தவர். தனதூராகிய காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தன்னுடைய பேரனுக்கு 'கம்பன்' என்று பெயரிட்டு வாய்நிறைய அழைத்து இன்பம் கண்டவர். அவர்தான் காரைக்குடியில் தொடர்ந்து அவ்விழா நடைபெறும் வண்ணம் ஏற்படுத்தியவர். பக்தி இலக்கியம் என்ற தகுதியை மட்டுமே பெற்றிருந்த கம்பராமாயணத்தை ஒரு பேரிலக்கியமாகப் புகழ் பெறச்செய்த பெருமையில் சா.கணேசனுக்குப் பெரும்பங்கு உண்டு. பல இடங்களில் கம்பன் கழகங்களையும் நிறுவக்காரணமாக இருந்தவர். முதன்முதலில் 1939ஆம் ஆண்டில் அவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தார். கி.பி.886ஆம் ஆண்டு பங்குனி மாதம், நான்காம் நாள், புதன்கிழமை, ஹஸ்த நட்சத்திர நாளன்று கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதாக சா.கணேசன் தம் ஆராய்ச்சியால் நிறுவியுள்ளார். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மகம், பூரம், உத்தரம் ஆகிய மூன்று நாட்களில் காரைக்குடியிலும் ஹஸ்தநட்சத்திரன்று நாடரசன்கோட்டையிலுள்ள 'கம்பனுடைய பள்ளிப்படை' என்னும் இடத்திலும் கம்பன் திருவிழா கொண்டாடப்படுகிறது. 1952ஆம் ஆண்டில் கம்பன் விழாவை முதன்முதலாகக் கொண்டாடத்தொடங்கினர். இவ்வழக்கத்தை ஏற்படுத்தியவர் சா.கணேசன்தான்.

கம்பன் அடிப்பொடி அவர்களின் தமிழ்த்தாய் கோயில்


மொழியைத் தாயாக மதிப்பவர்கள் தமிழர்கள். மதுரையில் தமிழன்னைக்கு சிலை கூட நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தமிழ்த் தாய்க்கு ஒரு கோவிலையும்கட்டி தெய்வமாக்கி வழிபட்டு வருகிறார்கள் செட்டி நாட்டுக்காரர்கள்.செட்டி நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள காரைக்குடிக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலக மகா கவிஞன் கம்பனுக்கு விழா எடுத்த முதல்ஊர் காரைக்குடிதான்.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மக நாள் தொடங்கி, தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும் கம்பன் விழாவில் பங்கு பெறாதசொற்பொழிவாளர்களோ, தமிழறிஞர்களோ இல்லை எனும் அளவுக்கு காரைக்குடி கம்பன் விழா சிறப்புடையது.தமிழ் இலக்கியங்களில் காரைக்குடியின் ஒரு பகுதியான கழனிவாசல் குறிப்பிடப் பெற்றுள்ளது. கழனிவாசல் பகுதியில் ஏழகப்படை செயல்பட்டதாகக்குறிப்புகள் உள்ளன. கழனிவாசல் பகுதியில் உள்ள வைணவத் திருக்கோயில் ஏழகம்பெருமாள் என்று இப்போதும் வழங்கப்படுகிறது.உலகத்திலேயே முதன் முதலாக மொழியைத் தெய்வமாக்கி, கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவிய கம்பன் "அடிப்பொடி"சா. கணேசன் அவர்களுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த் தாய் கோவில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.


கம்பன் மணி மண்டபத்தின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கியவாறு தமிழ்த் தாய்க் கோவில் அமைந்துள்ளது.மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்துள்ளது.தமிழ்த் தாய்க் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வட கீழ் கோடியில் வள்ளுவரும், தென் கோடியில்இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர்.தமிழ்த் தாய்க் கோவிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகியராக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.கருவறையில் தமிழ்த் தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில்காணப்படுகின்றனர்.
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறாள்.வலது முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்திராட்ச மாலையும், கீழ்இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன.சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில்,அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில்பொறிக்கப்பட்டுள்ளன.
வலது கால் கீழே தொங்கியவாறும், இடது கால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள்.தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன.நடராஜ மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச்செறிவும் உடையது."எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன" என்றுவைத்தியநாத ஸ்தபதி வியந்து குறிப்பிடுகிறார்.

முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்
வழிபாட்டு முறைகள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2001
தமிழ்த் தாயை வழிபடுவதற்கான சில முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
மலர் மாலை , நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றில் படைக்கப் பெறும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் திருவுருவங்கட்கு எண்ணெய் சார்த்தி திருநீராட்டுச் செய்யப் பெறும். மூர்த்திகட்குத் திருநீராட்டு செய்யும் போது அதற்கென அன்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண் கலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப் பெறும்.
தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருவங்கட்கு ஆடை, அணிகலன், மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.
மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் தமிழ் தெய்வத்திற்குப் படைக்கப்படுகின்றன.
கோவில் பொது வழிபாடு நிறைவேறியதும் தேங்காய், பழம், மலர் முதலியன நறைந்த படையல் தாம்பாளத்தை வந்திருக்கும் பெருமக்களில் வயது, அனுபவம் ஆகியவற்றால் மூத்த ஒருவருக்கு (சாதி-மத-பேதமின்றி) வழங்கிய பின் யாவர்க்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவை அருட் பொருளாய் (பிரசாதம்) வழங்கப் பெறும்.
மூர்த்திகட்கு நீராட்டுவது (குடழுக்கு), ஆண்டு பன்னிரெண்டுக்கு மேல் போகாமல் வரையறை செய்து விட வேண்டும். எண்ணெய், பால், தயிர், இளநீர், பழச்சாறுகள், நிறுமண நீர், கங்கை, மந்திரக்கலய நீர், பன்னீர் போன்றவை திருநீராட்டுக் காலத்தில் பயன்படுத்தப் பெறும்.
மந்திரக் கலய நீரை புனித நீராக ஆக்குவதற்கு மூன்று, ஆறு, பன்னிருவர் இருந்து தமிழ்ப் பாசுரங்கள் பாடி பாராயணம் செய்ய வேண்டும். 16, 24, 32, 64, 96, 108 முறை மாறி மாறிப் பாசுரங்கள் ஓதப்படும். அத்துடன் போற்றி வணக்கம் ஓதி, மலரும் பச்சிலையும் தூவப்படும். இந்த மந்திரக் கலய நீரை மேளவாத்தியம், தீவட்டி முதலிய மரியாதையுடன் எடுத்துச் சென்று திருநீராட்டு செய்யப்படும்.
தமிழ்த் தாய் மீது, மரபுக்கேற்றவாறு புலவர் பெருமக்களைக் கொண்டு பாடல்கள் யாத்து "தமிழ்த் தாய் பிரபந்தம்"என தமிழ்த் தாய் கோவில் திறப்பின்போது நூல் வெளியிடப்பட்டது. அப்பிரபந்தப் பாடல்களை நாள்தோறும்கோவிலில் ஓதுவார் இசைக்க வழிபாடு நடைபெறுகிறது

சி. சிதம்பரம், எம்.ஏ., எம்.பில் (பி.எச்.டி),முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த் துறை,அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி.
தேரெழுந்தூர் பெருமாள் கோயில்