ஞாயிறு, 8 மார்ச், 2009

கம்பனின் வெற்றி


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் தான் பார்த்து வருகிறது. ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களின் மன உணர்வோடு தான் சிறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆயுள்தண்டனை பெற்று சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏகாம்பரம் நாளிதழ்களில் வரும் நூல் விமர்சனத்தில் கம்பன் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ராமன் தரிசனம் நூலினை பற்றி படித்து விட்டு அந்த நூல்களை கேட்டு கம்பன் கழகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தைக் கண்ட கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா கம்பனின் வாழ்வியல் நெறிகள், இராமனைச் தரிசிப்போம், சரணடைவோம் போன்ற நூல்களை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நூல்களை படித்து விட்டுத் தான் மனம் உருக கடிதம் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்தாலும் அஞ்சல் வழியாக தமிழ் இலக்கியம் இளங்கலை பட்டம் இறுதியாண்டு பயின்று வருவதாகவும் இக்கைதி தெரிவித்து இருக்கிறார்.
சிறை வாழ்க்கை வாழும் எங்களுக்கு ராமாயணமும், மகாபராதமும் தான் விருப்பமான காவியங்கள். சிறை வாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒரு வகையில் தொடர்பு உண்டு என்று தான் ஆயூட் தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள். நம்புகின்றோம். இராமனின் கானக வாசம் 14 ஆண்டுகள். மகாபாரதத்திலே பாண்டவர்களின் கானக வாசமும் 14 ஆண்டுகள். இந்தியாவில் ஆயூட் தண்டனை சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே. சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும் போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களின் இந்த சிறை வாசம் தூசுக்கு சமமானது. ஆறுதலும், தேறுதலும் அவற்றை படிக்கும் பொழுது எங்களுக்கு ஏற்படுகிறது.
பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப்படைப்புகள் அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் என பல்வேறு முகங்களாய் வரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறார். கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருந்தவாக அமைந்துள்ளது என கைதி ஏகாம்பரம் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக நூல்களை படிப்பவர்கள் இப்படி ஆழமாக கடிதம் எழுதியதில்லை. ஒரு சிறைச்சாலையில் இருக்கும் ஒரு ஆயுள்தண்டனை கைதியை ராமாயணமும், மகாபாரதமும் இந்த விதத்தில் பாதித்திருப்பதை ஆச்சர்யமாகவே பார்ப்பதாக சொல்லும் ராஜபாளையம் கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா இக்கைதியின் கடிதம் குறித்து சொல்லும் பொழுது.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராமபாதையை இயற்றினார். அவரது எண்ணத்தை, லட்சியத்தை நிறைவேற்றத் தான் ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தை ஆரம்பித்தோம். இந்த கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் கம்பனுக்கு விழா எடுத்து வருகிறோம். அதே சமயத்தில் கம்பனைப் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து மாணவ, மாணவிகளிடையே கம்பனின் பெருமையை சென்றடைய வைத்து வருகிறோம். இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், பின்னால் பெரிய உயர் பதவிகளில் சென்றதை கடிதங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். மக்களிடையே கம்பனை பற்றிய விழுப்புணர்ச்சியை உருவாக்க ஆண்டு தோறும் பல நூல்களை வெளியிட்டும் வருகிறோம். இந்த நேரத்தில் ஒரு சிறையில் இருக்கும் ஒரு ஆயூள் தண்டனைக் கைதி எங்களின் நூல்களை கேட்டுப் பெற்று, படித்து கடிதம் எழுதியதை பார்த்து உண்மையில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களது பணி சிறைச்சாலைக்கு உள்ளேயும் சென்றிருக்கிறது.
சிறு வயதிலேயே இந்த நூல்களை எல்லாம் நாங்கள் படித்திருந்தால், இன்று சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டோம் என அவர்கள் கடிதம் எழுதுகிற பொழுது அவர்களை சிறு வயதில் வழி நடத்த சரியான ஆட்கள் இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. மன ஓட்டம், சிந்தனை வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டோமே, எப்படி வெற்றி அடைவது என்ற ஆதங்கம் தான் அந்தக் கைதிக்கு இந்த மாதிரியான நூல்களை படிக்க ஆதாரமாக இருந்திருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் பொழுது நிச்சயமாக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்கிறார்.
www.tamiloviam.com/unicode/01180708.asp

3 கருத்துகள்:

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

நண்பரே,நீங்கள் கணேசன் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரா?

நல்ல கம்பன்விழாவின் மணிகளான அறிஞர்களின் உரைகளை இங்கு தரலாமே...

காத்திருக்கிறோம் !

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

Pl remove word verification in comment settings under blog settings..thanks

Prabu M சொன்னது…

க‌ம்ப‌னைப் ப‌ர‌ப்பும் ம‌க‌த்தான‌ ப‌ணிக்கு ம‌ன‌மார்ந்த‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்!!
நிறைவாக‌ உண‌ர்ந்தேன் இந்த‌ப் ப‌திவைப் ப‌டிக்கையில்...