திங்கள், 30 மார்ச், 2009

கம்பன் அடிப்பொடி எழுதிய ராஜராஜன் திருமுறை கண்டது என்ற தலைப்பிலான கட்டுரையின் சிறுபகுதி



அப்பர், சம்பந்தர் , சுந்தரர் ஆகிய முவர் முதலியவர்களால் பாடப் பெற்ற தேவாரத் திருமுறைகள் தில்லையம்பதியில் அடைபட்டுக்கிடந்தவற்றை நம்பியாண்டார் நம்பியார் பேருதவியால் கண்டு வெளிப்படுத்தியவன் நம் இராஜராஜனே. அப்பணியில் பண்சுமந்த பாடல்களும், தமிழும், சிவநெறியும், பக்தித்துறைதயும் பெற்ற பேறு அளப்பரியதாம். கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருமுறை கண்ட புணம் ஓரளவு அப்பெரும் பணியைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதில் இராஜராஜன் "உலகம் மகிழ்தரு `சையம்'மீது தோன்றி ஓவாது வரு பொன்னி சூழ் சோணாட்டின் திலகம் என விளங்கும் மணி மாட ஆருர்த் தியாகேசர் பதம் பணிநது செங்கோல் ஓச்சி அலகு இல் புகழ்பெறு ராசராச மன்னன் அபயகுல சேகரன்'' என்று அருமையாகக் குறிக்கப்பெறுகிறான். கதை இதுதான் : சிவபெருமான் மீது எல்லையில்லாபக்தி பூண்டொழுகியவன் இராஜராஜன். ஒருநாள் தேவாரப் பாசுரங்களில் சிலவற்றை ஓதக் கேட்டான். செவிக்குத் தேனென இனித்த அப்பாக்கள் அவன் உள்ளத்தில் பாய்ந்து மெய் புளகிக்க, விழிநீர் அருவிபாய, ஒப்பரிய ஓர் உணர்ச்சியை விளைத்தது. பாடியோரைக் கேட்டான். அவர்கள் அறிந்தவாறு எடுத்து உரைத்தார்கள். ஏனைய பல்லாயிரம் பாசுரங்கள் இருக்குமிடமெது எனக் கேட்க பிறவற்றின் இருப்பிடம் யாதெனப் புலப்படுத்த அவர்களால் இயலவில்லை.

மிக்க ஆர்வத்தனாய் நாடெல்லாம் தேட ஆணையிடுகிறான். அப்படியும் அவை கிடைத்தபாடில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் திருநாரையூரில் ஆதிசைவ மரபில் தோன்றிய நம்பியாண்டார் நம்பிகள் அவ்வூர்ப் பொல்லாப் பிள்ளையாரை அழுது படையலை உண்ணச் செய்யும் அற்புதம் நிகழ்த்தியும் அவர்பால் தமருடன் வளர்தரு சதுர் மறைகளைக் கேட்டு உணர்த்தும் வருதலை இராஜராஜன் கேள்விப்படுகிறான். முக்கனிகளும், பால், தேன் முதலிய பற்பல உண்டிகளும் எடுத்துக் கொண்டு திருநாரையூருக்கு மல்லல் மிகு சேனையுடன் இராஜராஜன் மன்னனும் வந்து சேர்ந்தான். வந்த மக்களையும் பண்டங்களையும் எடுத்துரைத்து அனைத்தையும் இப்பொழுதே அவனுக்கு படைத்தருள்க என வேண்டி நின்றான். நம்பி வினாயகனை அடிபணிந்து அனைத்தையும் உண்டருள வேண்ட ஒன்றுவிடாமல் உண்டருளினார் பொல்லாப் பிள்ளையார். இந்த அற்புதத்தைக் கண்டு மெய் அரும்பி, உளம் நெகிழ்ந்து, விழிநீர் சோர வியந்து மகிழ்ந்து நின்ற மன்னர் மன்னன், இவர் உதவியால்தான் திருமுறைதகளின் இருப்பிடத்தை அறிய முடியும் என்ற முடிவுற்கு வந்தான். முவர் அருளிய திருமுறைகளை வேண்டி நின்றான். நம்பிகளோ கண்ணீர் மல்கி, உள்ளம் கசிந்துருகி, பிள்ளையார் அடிபணிந்து முவர் தமிழ் இருந்தவிடம் தெரிந்தருள்க என, பொல்லாப் பிள்ளையார் தில்லைச் சிற்றம்பலத்தின் புறக்கடையின் பக்கம் கைமுத்திரையிட்ட அறையினுள்ளே அவை உள என உரைத்தார். கேட்ட மன்னன் கிளர்ந்தெழு மனத்தினனாகி, திருச்சிற்றம்பலத்தை அடைந்து மறையோர்கள் பலருக்கும் "கணபதி கூறியது இது'' என்று நிகழ்ந்ததை எடுத்துரைத்தான். தில்லைவாழ் அந்தணர்களோ அவற்றைச் செய்து வைத்த முவர் வந்தாலன்றி அறையைத் திறக்க முடியாது எனக் கூறினார்.

நுண்ணறிவு மிக்க இராஜராஜன் கூத்து வல்லானுக்குரிய ஆதிரைத் திருநாள் அன்று பெருவிழாவை எடுத்துத் தமிழ் விரகர் முவர் தமிழ் இருக்கும் அறையின் முன் கொணர்ந்து "முவரும் வந்தாயிற்று. இனி அறை திறக்கப்படலாம்'' என ஆணையாக வெளிப்பட்டது இராஜராஜன் குரல். வேறு வழியின்றி அறைக்கதவு அந்தணர்களால் திறக்கப்பட்டது. ஏடு இருந்த இடத்தில் எழும்பியிருந்தது கரையான் புற்று. மன்னன் மாதுயரம் உற்றான். மண் செறிவை எல்லாம் நீக்கி தைலக்குடங்கள் பலவற்றைச் சொரிந்து செல்மடியச் செய்து திரு ஏடுகளை எடுக்க, அளவற்ற ஏடுகள் அழிந்து பயனற்றதாய் விளங்கக் கண்டு உள்ளம் நைந்து அழுது புலம்பி அயர்ந்தது நின்றான். அப்போது "சைவநெறித் தலைவரெனும் முவர் பாடல் வேய்ந்தனபோல் மண்முடச்செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம்'' என்று ஓர் அசரீரி ஒலித்தது. அதைகேட்ட மன்னன் மண்டிய துயரம் மாற மகிழ்ச்சியுற்று நம்பியாண்டார் நம்பி அடிகள் முடி சேர்த்து நன்றிப் பெருக்கைப் புலப்படுத்தினான். சிவனடியார்க்கெல்லாம் உதவுக என்று தனது பண்டாரத்தைத் திறந்து விட்டான்.

நன்றி : மா. திருநாவிற்கரசு (பதிப்பாசிரியர்), சித்தியவான் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா மலர். 01.06.2008

கருத்துகள் இல்லை: