சனி, 4 ஜூலை, 2009

கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு,



கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, சித. சிதம்பரம், (சிவா பதிப்பகம், 140 பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை, 94. 2009, விலை. 50.00)

கம்பனடிப்பொடியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிடப் பெற்ற கவிதைக் காப்பியம் இந்நூல். தரவுகளைத் தேடி அலைந்துத் தொகுத்து அதன் வேகம் மாறாமல், சுவை குன்றாமல் கவிதை ஆக்கியமைக்காக வெகுவாக இக்கவிஞரைப் பாராட்ட வேண்டும். அடிப்பொடியுடன் வாழ்ந்த, ஏறக்குறைய இருபது அன்பர்களைச் சந்தித்து அவர்கள் வழியாகவும், தானகவும் அறிந்து பெற்றச் செய்திகளை கவிதை வயமாக்கியிருக்கும் கவிஞரின் உழைப்பிற்குத் தக்கப் பரிசுகள் கிடைக்க வேண்டும்.

எண்பத்தெட்டுப் பக்கங்களில் நிகழ்விற்கு ஏற்ற பல்வகைக் கவிவடிவத்துடன் செறித்துச் செய்யப் பெற்றிருக்கிற உணர்வுக் காவியம்/ காப்பியம் இக்கவிதை நூல்.

தன்னிகரில்லாத் தலைவன், இருசுடர் தோற்றம், உலா, விழா எனப்பல காப்பியப் பாவியத் தகுதிகளுடன் இக்கவிதைக் காப்பியம் இலங்குகின்றது. அதனால் இதனைக் காப்பியம் என்றே தமிழுலகம் ஏற்க வேண்டும்.

இந்நூலுள் சிறுச் சிறு செய்திகளுக்குக் கூட அழுத்தம் தரப் பெற்றிருப்பது காப்பியத்தில் இடையே வரும் கிளைக்கதைகள் போன்று சுவை பயப்பதாக உள்ளன. காமராசரை முன்னறிவிப்பு இன்றிச் சந்திக்கப் போன கணேசனார் அனுபவத்தைப் பின்வரும் அடிகள் காட்டுகின்றன.

"திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த காமராசர் வீட்டுக்கு
ஒருமுறை முன்னர் அறிவிப்பின்றி சா. க. சென்றார் காணற்கு
வருவதை அறிந்த காமராசர் வழித்த பாதி முகத்தோடு
வரவேற்றாராம் கணேச அண்ணலை மரியாதை அன்புமனத்தோடு''
(ப. 58)

இரு சான்றோரிடத்திலும் சமமான அணுகுதலோடு இக்கவிதை அடிகளைக் கவிஞர் செய்திருக்கிறார்.

"காந்திச் சதுக்கத் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் தொழிலாளி நெல்லியான் ( ப. 31)'' என்று காரைக்குடியின் விடுதலை வரலாற்றிற்கும் சிம்மாசனம் இட்டுச் சிறுசெய்திகளுக்குத் தக்க இடம் கொடுக்கிறது இக்காப்பியம்.

இக்காப்பித்தில் சா. கணேசனாரின் தலைமறைவு, சிறைவாழ்வு மிக்க நேர்த்தியாக வடிவமைக்கப் பெற்றிருக்கிறது. மையப்பகுதியில் வரும் இப்பகுதி காப்பியத்தின் அழுத்தமிக்கப் பகுதியாகும்.

அட்டுழியங்களின் பட்டியல்கள்/ ஆணவத்தின் உத்தரவுகள்/ சா. கவின் தாயாரும்/ மனைவியும் மக்களும்/ தனித்திருந்த வீட்டில் / மலபார் போலிசார் வழியை / மறித்து நின்றனர்/ சிலுவையைச் சுமந்த மகன்/ சிறுசைச் சுமந்த மருமகள்/ வறுமை அறியாத வாழ்க்கை/ வாரிக் கொடுத்தச் செங்கை/ நாட்டிற்குத்/ தன்மகளை ஈன்ற தாய்/ வீட்டிற்குள் அடைக்கப்பட்ட வேதனை/ புன்னகை தொலைத்த போராளியின் மனைவி/ சின்னஞ்சிறிய செல்லமகள்/ தன்னை அடக்கித் தவமிருந்த தோற்றம்/ தியாகியைத் தெரிகிறது/ தியாகத்தைத் தெரிகிறது/ பின்புலம் என்றேனும் பேசப்படுகிறதா?( ப. 35)

வருத்தக் கோர்வைகளின் பட்டியலாய் கவிதை புதுக்கவிதை வடிவமெடுத்து ஓடுகின்றது. மனதில் வேதனை மறையாமல் நிற்கிறது.

தமிழ்த்தாய்க்குக் கோயில் வடித்து நிற்கும் கணேச அண்ணலின் பக்கத்தில் நின்று அங்குள்ள தமிழ்த்தாய்க்கு வணக்கம் பல சொல்லிக் கவிஞர் தன் தமிழ்த் தாகத்தினைத் தீர்த்துக்கொள்ளுகிறார். தமிழ்த் தாய்க்காகப் பாடப்பட்ட பதிமுன்று விருத்தங்களும் தமிழுக்குக் கிடைத்த விருந்துகள். ஒன்று மட்டும் பின்வருமாறு.

மொழிப்புலத்தின் ஒருமையிலே தொழுது போற்ற
முகம்மதியர் கிறித்தவர்கள், சமணர், இந்து
எழிலான மதம்கடந்த தேவி ஆனாய்!
எந்தமிழர் காரைநகர்க் கணேச மண்ணில்
அழியாத அறுகோணக் கோபுரத்தில்
அய்யன் வள்ளுவன் இளங்கோ கம்பனோடு
மொழியரசி நடுவிருக்க பரிவாரத்தில்
முன்னிருந்து வாழ்த்துகிறாய் முவாத்தாயே! (ப. 76)

கம்பன் திருநாளின் பெருமை கூறும் பெரும் பகுதி இத்தனை நாள் கம்பன் திருநாள்களின் அழியாப் பட்டியல். படிக்கப் படிக்க மேடைகள் நினைவிற்கு வருகின்றன. பேச்சாளர்கள் பேசும் மனக்காட்சி விரிகின்றது. இப்பகுதிகளில் கவிஞர் நேரடி சாட்சியாக கம்பன் திருநாளுக்கு அமைந்துள்ளார்.

தற்காலத் தடுமாற்றங்களும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படும் கவிஞரின் கருத்து நேர்மை சுட்டிக்காட்டத்தக்கதாகும். கணேசனார் தேர்தல் களம் கண்டபோது சில பின்னடைவுகளைச் செய்யச் சிலர் எண்ணினர். அதுகுறித்தக் கவிதைக் கண்டனம் பின்வருமாறு.

திசையெங்கும் பணம் கொடுத்து வாக்கு வாங்கும்
பணநெறியை இந்தியா கண்டதன்று!
பலமடங்கு கூடியது காணும் இன்று! (ப. 47)

இப்படி இனிய எளிய, தேவையான கவிதைச் செழுமையாய் இக்காப்பியம் அடிப்பொடியின் பெருமைக்கு அணி சேர்க்கின்றது. கவிஞரின் கவி உள்ளம் நம்மைப்போன்று படித்தவர்களால் பெரிதும் பேசப்பட வேண்டும். பேசப்படும்.

கருத்துகள் இல்லை: