வியாழன், 19 மார்ச், 2009

கம்பன் திருநாள்


இந்த ஆண்டு காரைக்குடி கம்பன் திருநாள் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதன் முன் நிகழ்வாக காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் கம்பன் அடிப்பொடி நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவை கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாக்குழுவினர் நடத்துகின்றனர். இவ்விழாவில் நீதிபதி இலக்குமணன் அவர்கள் தலைமை ஏற்கிறார்கள். கம்பன் கலைக் களஞ்சியுத்தையும் அவர்கள் வெளியிடுகிறார்கள். தொழிலதிபர் ஏ.சி. முத்தையா அவர்கள் இப்புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் மாண்புமிகு ப. சிதம்பரம், மாண்புமிகு இரகுபதி, மாண்புமிகு இராசா, தமிழக அமைச்சர் மாண்புமிகு பெரிய கருப்பன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுச் சிறப்பிக்கின்றனர். குமுதம் இதழ்க் குழுமங்களின் தலைவர் ஜவகர் பழனியப்பன் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டுப் பெருமைப்படுத்துகிறார்கள். மேலும் தோழர் தா.பாண்டியன் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்கள். திருமிகு இராஜேஸ்வரி நடராஜன், கணபதி ஸ்தபதி ஆகியோர் கம்பன் அடிப்பொடியாருடனான நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 6,7,8 தேதிகளில் கம்பன் திருநாள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நிகழ்கிறது. ஏப்ரல் ஒன்பதாம் தேதி நாட்டரசன் கோட்டையில் இவ்விழா தொடர்கிறது.

முதல் நாள் அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) (இவர் திருச்சி ராதாகிஷ்ணன் அவர்களின் மாணவர்) மற்றும் திருமிகு சாரதா நம்பி ஆருரன் (இவர் தற்போது தமிழ்நாடு அரசின் தகவல் ஆணையர் பதவியில் இருக்கிறார்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் கம்பன் அடிசூடி அவர்கள் ஏற்படுத்தியுள்ள மீனாட்சி பழனியப்பன் அறக்கட்டளைப் பொழிவினை சொல்லரசி இளம்பிறை மணிமாறன் அவர்கள் கம்பனில் எண்ணமும் வண்ணமும் என்ற தலைப்பில் ஆற்ற உள்ளார்கள். இவ்விழாவிலேயே இவ்வுரை புத்தகமாகவும் வெளிவருவது புதுமை. இதனை திருமிகு ஜவகர் பழனியப்பன் அவர்கள் வெளியிட இருக்கிறார்கள்.

அடுத்த நாள் (ஏப்ரல் 7) நிகழ்வில் திருமிகு கண. சிற்சபேசன் தலைமை ஏற்க திரு தெ. ஞானசுந்தரம் அவர்களும், இலங்கை ஜெயராஜ் அவர்களும் பங்கேற்கும் உரைக்கோலம் நடைபெற உள்ளது.

அடுத்த நாள் நிகழ்வில் ( ஏப்ரல் 8) திருமிகு நெல்லைக் கண்ணன் தலைமை ஏற்க பட்டி மண்டபம் நடைபெற உள்ளது. திருவாளர்கள் அப்துல் சமது, பழ. முத்தப்பன் ஆகியோர் இதனுள் வாதாட உள்ளனர்.

நாட்டரசன் கோட்டையில் இலங்கை ஜெயராஜ் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாக்களுக்கு வந்து இருந்து கம்பன் கவி அமுதைச் சுவைக்க அன்போடு கம்பன் கழகத்தார் அழைக்கின்றனர். வருக. வருக. வளம் சேர்ப்போம்.

2 கருத்துகள்:

palaniappan M சொன்னது…

அன்புடையீர்,
கம்பன் விழா பற்றிய அறிவிப்பு கம்பனடிப்பொடி வலையில் வந்தது.
கண்டேன்,மகிழ்ச்சி..

அந்தப் பதிவில் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்தால் அன்பர்கள் கருத்துச் சொல்ல ஏதுவாக இருக்கும்.இது வலை மனையில் comment settings என்ற பிரிவின் கீழ் வரும்.

திருவாளர் கணேசன் ஐயா அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினரா நீங்கள்?மிக்க மகிழ்வாயிருக்கிறது..
எனது தாயார் எங்கள் சொந்த ஊரான பொன்னமராவதியில் சுமார் 20 ஆண்டுகளாக கம்பகாதைச் சொற்பொழிவுகளும் கதைப் பிரசங்கங்களும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கும் ஐயா சா.க அவர்களிடம் அறிமுகம் இருக்கும் என்றே நினைக்கிறேன்..

விழா நிகழ்ச்சிகளை ஒலி வடிவிலோ அல்லது ஒளி ஒலி வடிவிலோ வலையேற்றினால்,நேரில் பார்த்து அனுபவிக்க இயலாத என்னைப் போன்ற எண்ணற்றோர் கண்டு,கேட்டு மகிழ ஏதுவாயிருக்கும்.

விழா வீடீயோ கவரேஜ் செய்யப் படுகிறதெனில் இது பெரிய விதயமல்ல,முயற்சிக்க வேண்டுகிறேன்..

நன்றியும் அன்பும்.

அறிவன்.
வலைமனை:சங்கப்பலகை.
சிங்கப்பூர்.

palaniappan M சொன்னது…

மிக்க நன்றி

தாங்கள் கம்பன் விழா குறித்து ஆர்வமாக பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி. இயன்ற அளவு ஒலி, ஒளிப் பதிவுக்கு ஏற்பாடு செய்து உங்களுக்குத் தருகிறேன்.