வியாழன், 9 ஏப்ரல், 2015

கம்பன் திருநாள்(2015 ) முதல் நாள் நடப்புகள்

காரைக்குடியில் எழுபத்திஏழாம் கம்பன் திருநாள் இன்று (1.4.2015) வெகுசிறப்பாகத் தொடங்கியது. தொடக்கவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு தருண்விசய் அவர்களுக்கு “அருந்தமிழ் ஆர்வலர்” விருது அளிக்கப்பட்டது. அவருடைய உரையைக்கேட்டபோது அவர் “அருந்தமிழ் ஆர்வலர்” விருதுக்கு முற்றிலும் தகுதியானவர் என்பதை உணரமுடிந்தது. நிகழ்வுக்கு நீதியரசர் வி.இராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். 

முன்னதாகக் கம்பன் மணிமண்டப வளாகத்திலுள்ள தமிழ்த்தாய் கோவிலில் வழிபட்டபின்னர் கம்பன் திருவுருவப்படம் மேளதாளம் முழங்க விருந்தினர் உடன்வர பிள்ளைகள் மலர்தூவ மண்டப மேடைக்கு பல்லக்கில் எழுந்தருளல் செய்யப்பட்டது.
திருமதி இலட்சுமி கிருட்ணமூர்த்தி, திருமதி இராதாசானகிராமன் அருள்ததும்பும் குரலில் இறைவணக்கம் பாடினர். கம்பன் கற்பகக் குழந்தைகள் கம்பன் திருவுருவப்படத்திற்கும், கம்பன்அடிப்பொடி சா.கணேசனாருக்கும் மலர்வணக்கம் செய்தனர்.

எல்லாவற்றையும் சிரத்தையுடன் இயக்கி, நடத்திவரும் கம்பன் அடிசூடி திரு பழ.பழநியப்பன் வரவேற்றார். வரவேற்பில் திரு தருண் விசய் திருவள்ளுவர் திருப்பயணத்தின்போது நாட்டரசன்கோட்டை கம்பன் சமாதிக்கு வந்ததையும் அப்போது கடவுள் வாழ்த்தான “உலகம்யாவையும்” இசைக்கப்பட்டபோது அதன் பொருளைக்கேட்டு கவரப்பட்டு வியந்துபோனதையும் குறிப்பிட்டார். கம்பன் சமாதி மண் பிள்ளைகளுக்குக் கல்விப்பேறுக்காக நாக்கில் இடப்படுவதை அங்கிருப்பவர் சொல்லக்கேட்டு தருண்விசய் தன் நாவில் சிறிது மண் எடுத்துக் குழைத்துவைத்துக்கொண்டு புளகாங்கிதமடைந்தாராம். தமிழன்னையின் தத்துப்பிள்ளை அவர் என்றார் திரு பழநியப்பன்.

பேராசிரியர் சரசுவதி இராமநாதனும், திருமிகு வள்ளி முத்தையாவும் கௌரவிக்கப்பட்டனர். 

திரு தருண்விசய் தன் தொடக்கவுரையில் நம் தாயகத்தின் பெருமையை நாம் உணரவேண்டுமென்றார். தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் போற்றினார். பாரதத்தின் முதல் கடற்படை கமாண்டர் இராசராசன் என்றார். இந்தியாவின் ஒவ்வொரு கடற்படை மையத்திலும் அப்பேரரசன் சிலை நிறுவப்படவேண்டுமென்றார். கிழக்காசியா முழுவதும் நம் ஆதிக்கம் இருந்ததென்றார். ஜப்பானிய மொழிக்கு தமிழ் எழுத்துருவைக் கைக்கொள்ளலாம் என்று அறிவுரைகூறப்பட்டதாகவும் ஆனால் ஏதுகாரணம்பற்றியோ மாண்டரின் எழுத்துரு கைக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
திருவள்ளுவரையும் கவிச்சக்ரவர்த்தி கம்பனையும் இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் மக்கள் கொண்டாடுவது அவர்தம் பெருமையால்! கம்பனைப்பற்றி வட இந்திய மாணவர்கள் அறிந்துகொள்ள கம்பனின் படமும் சிறு குறிப்பும் 5000 பள்ளிகளுக்கு வழங்கப்போவதாகவும் கம்பனுக்காக தபால்தலை வெளியிட ஆவனசெய்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டரசன்கோட்டை கம்பன் சமாதியில் தக்கதொரு நினைவிடம் ஏற்படுத்த உதவுவேன் என்றார். உரிய அமைச்சகத்தின் வழியாக ஏற்பாடுசெய்து காரைக்குடியில் தமிழ் அகாடமி (கம்பன் உயராய்வுமையம்) அமைக்க உறுதியேற்றார். இப்பணிக்குத் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஐந்து இலட்சம் வழங்குவதாக ஏற்றுக்கொண்டார். அருமையான ஆங்கிலத்தில் தெளிவான, உணர்வுபூர்வமான உரை; வணக்கம், நன்றி, அவர்கள் போன்ற தமிழ்சொற்கள் தூவலுடன்! அடுத்தமுறை வரும்போது தமிழில் உரையாற்றுவதாகச் சபதமேற்றார்.

நீதியரசர் திரு இராமசுப்பிரமணியன் உரை அற்புதமாக இருந்தது. தேவையானவற்றை ஆங்கிலதிலும் மொழிபெயர்த்து எம்.பிக்கு கூறினார். கம்பன் உத்திரகாண்டம் எழுதவில்லை. அக்குறைபோக்க உத்ரகாண்ட் எம்.பி யே கம்பனுடன் இணைந்துவிட்டார். தமிழுக்கு கதி கம்பனும் திருவள்ளுவரும் என்பார்கள். திரு தருண்விசய் திருவள்ளுவரைச் சிரமேற்கொண்டு 50 சதவிகிதத் தமிழராக இருந்தார். இன்று அடுத்த பகுதியான கம்பனைப் போற்றி 100 சதவிகிதமடைந்து முழுத்தமிழராகிவிட்டார் என்று அரங்கம் கரவொலியால் அதிரும்படி குறிப்பிட்டார்.

பள்ளி, கல்லூரி மாணவச்செல்வங்களுக்கான கம்பராமாயணம் குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு (ஏறத்தாழ இருபது பரிசுகளில் ஒன்றைக்கூட மாணவர் வெல்லவில்லை!) திருமிகு வள்ளி முத்தையா அவர்கள் பரிசளித்தார். 
பேராசிரியர் திரு சொ.சேதுபதி அழகு தமிழில் திருமிகு சரசுவதி இராமநாதனுக்கு வாழ்த்துக்கவிதை வாசித்தளித்தார். நண்பர் பேராசிரியர் திரு மு.பழநியப்பன் மிகுந்த ஆர்வத்துடன் உதவிப்பணியாற்றினார்.

நாளை திரு பழ.கருப்பையா அவர்களின் தனி உரையும் நர்த்தகி நடராஜ் நாட்டியமும் இருக்கிறது. நாளை மறுநாள் திரு சுகி.சிவம் தலைமையில் பட்டிமன்றம். நிறைவுவிழா நட்டரசன்கோட்டையில் 4.4.2015 நடைபெறவிருக்கிறது.
நண்பர்கள் பார்வைக்கும் கனிவான கருத்திற்கும் படங்கள் இணைத்துள்ளேன்.
நன்றி
அன்புடன்

கருத்துகள் இல்லை: