தரமான கல்வி: ஆசிரியர்களுக்கு பொன்னம்பல அடிகளார் வேண்டுகோள்
First Published : 15 Jun 2011 12:00:02 PM IST
காரைக்குடி, ஜூன் 14: மாணவர்களை தங்கள் குழந்தைகளாக ஆசிரியர்கள் நினைத்துப் பார்த்தால்தான் தரமான கல்வியை கற்றுத் தர முடியும் என்று பொன்னம்பல அடிகளார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் திங்கள்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. காலையில் அருள்மிகு சண்முகநாதப்பெருமான் குன்றக்குடி ஆதீனத் திருமடத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், இரவு நடைபெற்ற பாராட்டு விழாவில் காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் கம்பன் அடிசூடி பழ.பழநியப்பனுக்கு அவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தைப் பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.
விழாவில் பொன்னம்பல அடிகளார் பேசியது:÷தாயின் கருவிலிருந்து வெளியே விலங்கு போன்றுதான் மனிதன் பிறக்கிறான். அவனுக்கு மனிதத்தை எது கற்பிக்கிறதோ, அதுதான் கல்வியாகும்.
இலக்கிய உலகம் என்பது எழுத்துகளின் சேர்க்கையல்ல. சொற்களின் கூட்டமல்ல. அது வாழ்க்கையின் கணக்கு. அந்த கணக்கைத்தான் பக்தி இலக்கிய உலகில் அரசர்கள் வெல்வதும், ஆண்டவன் வெல்வதும் அற்புதமல்ல மானுடம் வென்றதம்மா.. என்று உரக்கக் கூறினான் கம்பன். அந்த கம்பனை போற்றிய கம்பன் அடிப்பொடியார் இந்த மண்ணிலே வாழ்ந்தவர். கம்பன் அடிப்பொடியாரின் சீடராக இருந்து இன்று பாராட்டுப் பெற்றுள்ளவர்தான் பழ.பழநியப்பன்.
தரமான இலக்கியத்தை சமூகத்துக்குச் சரியாகச் சொல்வது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. இந்த தேவையை பூர்த்தி செய்துவரும் பழ.பழநியப்பன் மேலாண்மைத் துறையில் பயிற்சிபெற்றவர். மேடையில் பேசுகின்றவை காற்றோடு போய்விடாமல் நூலாக ஆவணப்படுத்தும் பணியையும் பழ.பழநியப்பன் செய்திருக்கிறார்.
இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றமைக்காக பாராட்டப்பட்டுள்ளனர். கடைக்கோடி கிராமத்தில் பிறந்த மாணவி ஒருவர் சொல்லும்போது அப்பா இல்லை, அம்மாதான் தமக்கு இருக்கிறார் என்று கூறினார். அந்த மாணவிதான் கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் 480 மதிப்பெண்களை 10-ம் வகுப்பில் எடுத்திருக்கிறார். அவருக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஆசிரியர்கள் வகுப்பறையில் பயிலுகிற குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக நினைத்துப் பார்த்தால்தான் தரமான கல்வியை கற்றுக் கொடுக்க முடியும் என்றார் பொன்னம்பல அடிகளார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சேது.சுடலைமுத்து பேசியது:÷இலக்கியச்செம்மல் பட்டம் பெற்றுள்ள பழ.பழனியப்பன், கம்ப ராமாயணத்தில் கட்டுரை, பேச்சு, ஒப்புவித்தல் போட்டிகளை நடத்தி இளைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படுத்தி வருகிறார். கம்பன் ஒரு சிறந்த நிர்வாகி என்ற நூலை எழுதி கம்பனது நிர்வாகத் திறமையை அறியச் செய்திருக்கிறார். அவரது இலக்கியப் பணி மென்மேலும் தொடரவேண்டும் என்றார்.
விழாவில், குன்றக்குடி ஆதீனப் புலவர் க.கதிரேசன் எழுதிய மதுரகவி ஆண்டவரின் சந்த வருகைப் பதிகம், மயூரகிரி முருகன் அநுபூதி என்ற நூலையும், ஆதீனக்கவிஞர் மரு.பரமகுரு குறிப்புரையுடன் கூடிய குன்றக்குடி ஆதீன மகாவித்வான் வீரபத்திரக் கவிராயர் பாடிய குன்றக்குடி குறவஞ்சி எனும் நூலையும் பொன்னம்பல அடிகளார் வெளியிட்டார்.
பேராசிரியர் சேதுபதி நூல் குறித்து ஆய்வுரையாற்றினார். பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த சுவாமி, ஆறு.மெய்யாண்டவர், பேராசிரியர் அய்க்கண் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக