செவ்வாய், 23 அக்டோபர், 2012

கம்பன் அடிப்பொடி வரைந்த நகரத்தார் வரலாறு

Nagarathar Varalaru

- ஆக்கியோன் கம்பன் அடிப்பொடி சா. கணேசன்

மகுட (சோழ மன்னர்க்கு மணிமுடி சூடும் மரபினர்)
தன வைசியர் (பொருள் கொடுத்துப் பலிடை (வட்டி) வாங்குபவர்)
பூமி பாலர் (மன்னர் பின்னோர்) நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப் பெயர் பெரும் செட்டிமார்கள் ஆதியில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவந்தவர்கள். காஞ்சிபுரத்தில் உள்ளூரிலும் உள்நாட்டிலும் வணிகம் செய்பவர்களாகவும் மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் இருந்து மரக்கலம் வழியாக வெளிநாட்டு வணிகம் செய்பவர்களாகவும் விளங்கியிருந்தார்கள். அக்காலத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை நாடு முழுவதும் சோழ நாடாகவே இருந்தது.
கரிகாலச்சோழன் காலத்திற்குப் பின்னர் - அதாவது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் - வெள்வெற்கிள்ளி என்னும் மாதயை காதலித்து மணந்தான். அவள், தன்னை மணக்க மன்னனுக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். அதனை அம்மன்னனும் ஏற்றான். அதன்படி அம்மாதிற்க்குப் பிறக்கும் மைந்தனுக்குச் சோழநாட்டில் பாதியை வழங்க வேண்டும் என்பதாகும். கருவுற்றதும் அம்மாது நாக நாட்டிற்கு சென்று விட்டாள்; ஆண் குழந்தை பிறந்து தக்க பருவம் வந்ததும் அக்குழந்தையைக் கப்பல் வணிகம் செய்யச் சென்றிருந்த ஒருவணிகர் கூட்டத்தின் மூலம் மன்னன்பால் சேர்ப்பிக்கும்படி அனுப்பிவைத்தாள். அக்குழந்தை வந்த படகு, நாகைத் துறைமுகத்தை அடுத்துக் கடல் அலையால் பொத்தென்று உடைத்துவிட்டது. அப்படகில் இருத்த்வர்கள் எப்படியோ, அடைந்த படகின் மரத்துண்டுகளை பிடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். பீலிவளையின் மைந்தனும் அவர்களுடன் ஒரு மரத்துண்டைப் பிடித்துகொண்டு கரை சேர்ந்தான். அவனை அழைத்துவந்த வணிகர் கூட்டத்தினர் அம்மைந்தனை மன்னன்பால் சேர்ப்பித்தினர். அச்சோழனுக்கும், பீலிவளைக்கும் ஏற்பட்ட ஓர் உடன்பாட்டின்படி அம்மைந்தன் கழுத்தில் தொண்டைக்கொடியுடன் இருந்தான். அவ்வாறு இருந்த அவனைச் சிற்றலைகள் கரை சேர விட்டதால் அவன் பெயர் 'தொண்டைமான் இளந்திரையன்' என்றாயிற்று. மன்னனும் நிபந்தனைக்கேற்ப சோழ நாட்டின் ஒரு பாதியை அவனுக்கு வழங்கினான். தொண்டைமான் ஆண்டதால் 'தொண்டை நாடு' என்று அப்பாதி, பிற்காலத்தில் பெயர் பெற்றது. தென்பெண்ணை ஆற்றுக்கு வடக்கே, திருப்பதிக்கு தெற்கே, கடலுக்கு மேற்கே, பவள மலைக்குக் கிழக்கே இந்நான்கு எல்லைக்குள் உட்பட்ட நாடு தொண்டை நாடாயிற்று.
வெள்வெற்கிள்ளி சோழநாட்டின் வட பகுதியை இளந்திரையனுக்கு வழங்கிய பின் காஞ்சியிலிருந்து பலதுறை வணிகம் செய்து வந்த நம் முன்னோரை அழைத்து, அவர்களை எல்லாம் சோழ நாட்டிற்கு வந்து குடியேறித் தம் வணிகத்தை நடத்தும்படியும், அதற்கு வேண்டிய எல்லா வசதிகளையும் தான் செய்து தருவதாகவும் கூறினான். அதற்கேற்ப நம்மவர்களும் காஞ்சிபுரத்தைவிட்டுப புறப்பட்டுச் சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம், நாகபட்டினம், காரைக்கால் முதலான நகரங்களில் குடியேறினர்
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவர்கள் ஆதலால் இவர்கள் நகரத்தார் என்று பெயர் பெற்றனர். இவர்களுள் மிகப் பெரும்பாலோர் காவேரி்பூம்பட்டினதிலேயே வசித்து வந்தனர். அங்கு வாழ்ந்தவர்கள் உள்ளூர்களிலும், வெளியூர் சென்றும், பிற மாநிலங்களுக்கு பொதி மாட்டுவண்டி மூலம் வணிகம்செயதும் பிற தேசங்களுக்கு மரக்கலங்களின் மூலம் ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்து் வளம் பெற்று விளங்கினர்.
இவர்கள் தங்கள் வணிக முறைகளை ஒர் உரிமையுடனும் ஒழுங்குடனும் ஆற்றி வந்தனர். பெரும்பாலும் வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் கூட்டமாகவே செல்வர். வெளியிடம் செல்வோர் சாந்து (Traders Cararan) (சாந்து - வணிகச் சாந்து) என்று வழங்கப்பெற்றனர். பிற நாடுகளில் கடல்வழி வணிகம் செய்தோர் "மணிக்கிராமம்" (மேற்கான்டிலே கில்ட்) என்று வழங்கப்பெற்றனர். எல்லா வகை வணிகர்களும் தங்கள் தொழில் செம்மையாய் நடைபெற ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு 'நகரம்' எனப் பெயர் (Chamber of Commerce) பெற்றது.
இவர்கள் தங்கள் "நகரம்" செயல்படுவதற்கு ஒரு பெரிய மாளிகை அமைத்திருந்தனர். அதற்கு இணைசிலையாக சித்திரமேழி (கலப்பை) யையும் கோடியாகச் சிலர் சிங்கத்தையும் கொண்டிருந்த்தனர். மேலும் தங்கள் நகர மாளிகையில் வெள்ளிக் கதவும் அமைந்திருந்தனர்.
மன்னரும் மதிக்கப் பலவகையாலும் சிறந்து விளங்கினர். மன்னருக்கு முடி சூடும் பெருமையினையும் உரிமையையும் உடையவர்களாய் விளங்கியிருந்தனர். பல அறப்பணிகளையும் ஆற்றி, கொடைநலம் படைத்திருந்தனர். இவர்களின் கொடைச்சிறப்பையும், நடைச்சிறப்பையும், நேர்மையையும் பற்றி பலப்பல பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று

"ஈட்டிய எல்லாம் இதன்பொருட்டு என்பது
காட்டுய கைவண்ணம் காட்டினார் - வேட்டோறும்
காமருதோள் சென்னி கடல்சூழ் புகார்வனிகர்
தாமரையும் சங்கும்போல் தந்து"
இப்பாடலின் பொருள்: "பூம்புகார் நகரத்து வணிகர்கள் தாங்கள் தேடிய பொருளை எல்லாம் அரனழி செய்வதற்கே என்பதனைக் காட்டுவதாகவும் சங்கநிதி, பதுமநிதி வழங்குவது போலத் தங்கள் வள்ளல் தன்மையை தம் கொடையால் காட்டினார்கள். சங்கநிதி, பதுமநிதி என்பன செல்வத்துக்கு அதிபதியான குபேரனின் இரு நிதிகள்". இங்ஙனம் இவர்களின் சிறந்த வாழ்வு சுமார் ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் காவிரிப்பூம்பட்டினமாகிய பூம்புகாரில் விளங்கிற்று. அதன் பிறகு, சுமார் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட மன்னனுக்கும் நகரத்தார்களுக்கும் விரோதம் ஏற்பட்டது. அதற்கும் காரணம் பலவாறாய் சொல்லப்படுகிறது.
1. இவர்கள் கொடைச்சிறப்பால் ஏற்பட்ட பொறாமை.
2. இவர்கள் தங்கள் நகர மாளிகைக்கு வெள்ளிக்கதவு அமைத்தனர்.
3. காவேரி ஆறு பெருக்கெடுத்த பொழுதோ கடல்பொங்கி எழுந்த பொழுதோ மன்னன் செய்வதறியாது மயங்கி நிற்க, தங்களிடமிருந்து பழசுப் பொதியை அடுக்கி, வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திவிட்டதால் தனக்குக் குறையை ஏற்படுத்திவிட்டதாக மன்னன் கருதி, அதன் காரணமாய்க் வெறுப்பு கொண்டார்.
4. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நகரத்தார் வீ ட்டுப் பெண் குழந்தையின் அழகில் ஈடுபட்டு, உலா வந்த மன்னன் இக்குழந்தையை எடுத்து முத்தமிட, அச்செயலை நகரத்தார் கண்டித்ததால் மன்னனுக்கு ஏற்பட்ட சினம்.
இப்படியான பல காரணங்களால் அக்கால மன்னனுக்கும், நகரத்தார்க்கும் இடையில் உண்டான மனக்கசப்பு பகை உணர்வாய் மாறிவிட்டது. அந்த நிலை நாளுக்குநாள் வளர்ந்துதே அன்றி குறைந்து ஒரு சுமூக நிலை ஏற்பட வழி பிறக்கவில்லை. அரசனும் கடுமையாய் இருந்தான். நகரத்தாரும் தன்மான உணர்வால் பிடிவாதமாய் இருந்தனர்.

இச்செய்கை உணர்வாலும் அச்சத்தாலும் மன்னன் தங்களைத் தண்டித்திடும்மென்று அஞ்சித் திக்குளித்தோ மன்னனால் தண்டிக்கபட்டோ மிகப்பெரும்பாலான நகரத்தார்கள் உயிர் விட்டனர். இது எவ்வளவு உண்மை எனத் துணியத் தக்க சான்றுகள் இன்று கிடைக்குமாறில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தொகையினர் சோழ நாட்டை விட்டு வெளியேறிப் பாண்டிய நாட்டை சேர்ந்தனர். அப்படி வந்தவர் தொகை 500 என்று துணிய முடிகிறது. நகரத்தார்க்கு 'ஐநூற்றவர்' என்று பெயர் இருப்பதாலும், இவர்கள் வசித்த பகுதி ஐந்நூற்றவப்பெருந்தெரு என்று கல்வெட்டுகள் கூறுவதாலும் முடிவு செய்வது எளிதாகவும் சரியாகவும் இருக்கிறது.
இங்ஙனம் நாடு பெயர்ந்து வந்தவர்கள் எல்லாரும் நாட்டரசன் கோட்டையில் சிலகாலம் ஒருங்கிணைந்து வாழ்ந்தனர். இது கி.பி.10 ஆம் நூற்றாண்டில் என்பது கணிக்க முடிகிறது. அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த வீரபாண்டியன் முதலியோரிடம் வேண்டி ஏழு கோயில்களை பெற்று அவற்றை தத்தம் கொத்திரமாய் கொண்டு அங்கு குடியேறியும் வழிபட்டும் வந்திருக்கின்றனர்.
அவையாவன (1) இளையாத்தாங்குடி, (2) மாத்தூர், (3) வயிரவன்கோயில், (4) நேமம்கோயில், (5) இலுப்பைக்குடி, (6) சூரக்குடி, (7) வேலன்குடி ஆகியவையாகும்.

ஆகவே தான் நகரத்தார்களை ஏழகத்தார் என்றும், ஏழுவழியினர் என்றும் வழங்கி வந்திருக்கின்றனர். கல்வெட்டுகளிலும் ஏழகத்தார் என்ற பெயரும் காணப்படுகிறது. இவர்களின் காப்புப்படைக்கு ஏழகப்படை என்ற பெயரும் காணப்படுகிறது. அந்த 'ஏழகப்படை' இருந்த இடம் காரைக்குடியை அடுத்த கழனி வாசலுக்கும் பழைய பெயர் 'ஏழகப்பெருந்தெரு' என்பதாகும். வயிரவன் கோவிலாரின் கொத்திரப்பெயர் 'ஏழகப்பெருந்தெருவான வீரபாண்டிய புரமுடையார்' என்பதும். இன்றும் அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு ஏழகப்பெருமாள் விண்ணகரம் என்பதும் குறிப்பிட்டத் தக்கனவாகும். நகரத்தாருக்குப் படையுண்டா என்று சிலர் ஐயுறலாம், உண்டு நிச்சியம் உண்டு. நாடு காக்க மன்னர் படை வைத்திருப்பர். வணிகப் போரும் காக்க வணிகர்கள் படைவத்திருப்பர். எனவே தான் தொல்காப்பியம்,

"இடைஇரு வகையோர் அல்லது நாட்டின்
படைவகை பெற்றோர் என்மனார் புலவர்"(மரபு 77)

எனக் குறிப்பிடுகிறது. இடை இருவகையோர் என்றால் அந்தணர் அரசர், வணிகர், வெள்ளாளர் என்னும் நால்வகையில் தலையும் கடையும் ஆகிய அந்தணர், வெள்ளாளர்.
இருவகையையும் நீக்கிவிட்டு, அரசர் வணிகர் ஆகிய இரு இடைவகையார் என்றுதானே கொள்ள வேண்டும்! ஐந்நூற்றவர் என்பது நகரத்தார்க்குரிய பெயர் என்பதாலன்றோ மாற்றூப்பெருமான் "ஐந்நூற்றிசுவரர்" என்று பெயர் பெற்று உள்ளார். நானாதேசங்களுக்கும் சென்று வணிகம் செய்பவர்கள் ஆனதால் நானாதேசிகள் என்றும் 'தேசி' என்றும் பெயர் பெருவர். அதனாலேயே, பிள்ளையார்பட்டிப் பெருமான் தேசி விநாயகப் பிள்ளையார் என்றும், சூரைக்குடிப் பெருமாள் தேசிகநாதர் என்றும் பெயர் பெருவாராயினர்.
சுமார் 12 ஆம் நூற்றாண்டை ஒட்டித் திருவேட்புடையார் பிரிவினராகிய இரணியூராகும். பிள்ளையார்பட்டியாரும் தம்முள் புள்ளி எண்ணிக்கை அதிகமாய் இருப்பதால் இளையத்தான்குடிக் கோவிலிலிருந்து பிரிந்து, பாண்டியனிடம் வேண்டி, முறையே இரணியூரையும் பிள்ளையார்பட்டியையும் பெற்று அங்கு குடியேறி கோவில் அடுத்து வழிபட்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதற்குத் தக்க அசைக்க முடியாத - சான்றாய்ப் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டு விளங்குகிறது. காரைக்குடி ஐந்நூற்றவப் பெருந்தெருவில் உள்ள நகரத்தார்க்கு விற்று விலைப்பிரன் மாணம் செய்து கொடுத்த செய்தி குடவரைக் கோவிலில் உள்ள கல்வெட்டுகளால் நன்கு புலப்படுகிறது. இது சுமார் 12 ஆம் நூற்றாண்டில் என்று அறிய முடிகிறது.
நாளாவட்டத்தில் ஒன்பது கோவில் உள்ள ஊர்களில் வசித்த நகரத்தார்கள் வெவ்வேறு ஊர்களில் சென்று வசிக்கலாயினர். அவையாவன (1) இளையாத்தாங்குடி, (2) மாத்தூர், (3) வயிரவன்கோயில், (4) நேமம்கோயில், (5) இலுப்பைக்குடி, (6) சூரக்குடி, (7) வேலன்குடி, (8) இரணிகோயில், (9) பிள்ளையார்பட்டி ஆகியவையாகும். அப்படிக் குடியேறிய ஊர்கள் தொன்னூற்றாறு ஆகும். எனவே, தொன்னூற்றாரூர் நகைத்தார் எனப் பிற்காலத்தில் பெயர் பெற்றனர்.
அந்தத் தொன்னூற்றாறு ஊரில் வாரிவயல், போய்யளூர், சிவரக்கோட்டை, ஆலங்குடி, மேலமகாணம், கூத்தலூர், நெய்வாசல், இளையாத்தங்குடி, வயிரவம்பட்டி, நேமம், இரணியூர், குறட்டி, தட்டட்டி, கம்பனூர், இலுப்பைக்குடி, மாத்தூர், கிரணிப்பட்டி, சேர்ந்தணி, எழுவன்கோட்டை, கீழக்கோட்டை ஆகிய ஊர்களில் தற்பொழுது நகரத்தார்கள் வசிக்கவில்லை.

நாட்டரசன் கோட்டையைச் சேர்த்து ஊரமைத்துக் குடியேறிய நகரத்தார்கள் காவிரிப்பூம்படினத்தைப் போலவே நகர நிர்மானம் செய்திருக்கின்றனர். ஊரின் நடுவில் பெருஞ்சதுக்கம் அமைத்து, அதில் பல திருக்கோயில்களையும் எடுத்து, அதை சுற்றி வீடுகள் கட்டிக்கொண்டிருப்பதை இன்றும் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த்து வரும் போது தங்களுடன் உவச்சர்களையும் அழைத்து வந்து, கண்ணகித் தாய்க்கு பீடம் அமைத்துக் கோவில் எடுத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். அதுவே கணணாத்தாள் - அல்லது - கண்ணனுடைய அம்மன் - கோவிலாய் இன்று விளங்குகிறது.
உவச்சர்கள் பலர் இங்கு இருப்பதாலும், அவர்களும் சிலர் தம் உறவினர்களாகவோ நண்பர்களாகவோ இருந்தாலுமே தான் கவிச்சக்கரவர்த்தி நாட்டரசன் கோட்டைக்கு வந்து தங்கியிருக்க வேண்டும். அப்படித் தங்கியிருந்த காலத்தில் மரணம் எய்தியதால் கம்பனின் பூத உடலுக்குப் பள்ளிபடைக் கோவில் (சமாதி) நாட்டரசன் கோட்டையில் ஏற்பட்டிருக்கிறது. அதையும் நம் நகரத்தார் குடும்பமே பரிபாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள தோட்டம் ஆ.வி. அரு. இராமநாதன் செட்டியார் குடும்பத்தாருக்கு உரியது. கம்பன் சமாதி சோலை சூழ்ந்த அழகிய கோயிலாய் அமைந்துள்ளது. காரைக்குடி கம்பம் கழக நிறைநாள் இங்கு நடைபெறுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்லிருந்து வந்தவர்களுள் நம்மவர்கள் இடையில் புலால் உணவு கொண்டதாலோ வேறு காரணத்தாலோ தனித்து விடப்பெற்றனர். மற்றையோர் மதுரை வழியாக மேலும் தெற்கு நோக்கிச் சென்றனர். அவர்களுள் அரியூராரும் இங்ஙகனமே இடையில் விடப்பெற்றனர். அவர்கள் பிரான்மலையைச் சுற்றிய ஊர்களில் குடியேறி பிரான்மலைக் கொடுன்குன்றிரைக் குல தெய்வமாய்க் கொண்டு வாழ்ந்து வருவாராயினர்.
எஞ்சிய நகரத்தார்கள் நாகர்கோவில் கோட்டற்றுப் பகுதியில் குடியேறினர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கொண்டுவந்த மரகதப் பிள்ளையாரைக் கோட்டாற்றில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாராயினர். அக்கோவில் உள்ள தெரு செட்டித்தெரு எனப்படுகிறது. அங்குள்ள பிள்ளையார் பெயர் தேசிக விநாயகர் என்பதாகும் இன்றும் அக்கோவில் மிகச்சிறப்பாய் விளங்கி வருவதை காணலாம்.

பாண்டி நாட்டிற்கு வந்த நம்மவர்கள் தொழில் நிமித்தமாய்ப் பல நாடுகளுக்கும் , கடல் கடந்தும் சென்று வந்தனர். தலைப்பில் நாகை, திருநெல்வேலி, சென்னை, மதுரை முதலான தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கும் , பின்னர் வங்காளம், கஞ்சம் முதலிய வெளி மாநிலங்களுக்கும் , பிறகு யாழ்ப்பாணம், கொழும்பு முதலிய பகுதிகளுக்கும் , அதன் பிறகு பர்மா, மலேஷியா, சிங்கப்பூர், செய்கோன், மைடான் முதலான இடங்களுக்கும் சென்று தொழில் செய்துவந்தனர்.
முதலில் பண்டங்கள் வாங்கி விற்பதையே தொழிலாய்க் கொண்டிருந்தனர். பின்னர், நாளாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள், பணம் கொடுக்கல் வாங்கல் (Banking) தொழில் முறையில் ஈடுபட்டனர். ஆனாலும், பழைய முறைப்படியே பொருள்களை கொண்டு விற்கப் போய்வருவதாகவே கூறி வந்தனர்.

நகரத்தார்களில் தொழில் முறையையும், கணக்கெழுதும் முறையையும், நாணயத்தையும் பற்றிப் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் மட்டுமன்றி ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட பாங்கிங் என்வோயரிக் கமிஷன் எனப் பெயரிய விசாரணைக் குழுவும் மிகச் சிறப்பாய் பாராட்டியிருக்க காணலாம்.

கணிக்கனியை தேடிக் கோடி கோடியை தருமம் செய்த சமூகம் என்று நகரத்தார் சமூகத்தை நல்லோர் எல்லாம் பாராட்டுவர். மூவேந்தர் ஆட்சி முடிந்து பிற மதத்தவர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நாம் ஏராளமான ஆலயங்களைத் திருப்பணி செய்து ஆலயங்கள் அழியாமற் காத்தனர். ஆலயங்கள் மட்டுமல்லால் பாடசாலைகள், பசுமாடங்கள் சத்திரங்கள், மருத்துவ சாலைகள் முதலியனவும் தோற்றுவித்து நலம் புரிந்து வந்தனர்.
தற்பொழுது நகரத்தார்களுடன் பலர் பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, பல்கலைக் கழகம் போன்று காலத்திற்கேற்ப அறங்களிரும் ஈடுபட்டுப் பயன் பெற்று வருகின்றனர்.

மக்கள் தொகையால் சிறிய சமூகமே ஆனாலும் அறப்பணிகளால் உலகறிந்த ஒரு சமூகமாய் திகழ்கின்றது. நகரத்தார் சமூகம் காசி முதல் இராமேஸ்வரம் வரை இவர்களின் அறப்பணி இல்லாத இடம் இல்லை என்னும்படி எல்லா இடங்களிலும் இவர்களின் நற்தொண்டு நாளும் மலர்ந்து மணம் பரப்பி வருகிறது.

வெளியிடங்களில் மட்டுமின்றி தாங்கள் நிரந்தரமாய் வசிக்கும் ஊர்களிலும் சிவன்கோவில் எடுத்து அருமையாகப் புரந்து வருவது கண்கூடு. அப்படி அமைக்கப்படும் கோவில்கள் யாவும் மதுரை மரபையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில்களுக்கவே இருக்கக் காணலாம்.
வாழ்க நகரத்தார் சமுகம் !
வளர்க அவர்தம் அறபணிகள் !

கருத்துகள் இல்லை: