செவ்வாய், 24 மே, 2011

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி ஒன்று வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை நிகழ உள்ளது.

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன.

மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிற்து. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராக விளங்கும் முனைவர் ந. சேசாத்திரி அவர்கள் தன் தாயார் பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

இதுவரை கம்பன் ஆய்வு நிகழாத துறையில் சிறந்த அறிஞரைக் கொண்டு செய்யப்படும் இப்பொழிவு நூலகவும் அன்றே வெளிவருகிறது. வரும் ௪ ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு முனைவர் சொ. சேதுபதி அவர்கள் கம்பனைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்ந்து கம்பன் காட்டும் உலகு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் அடியார் பரகாலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்
கம்பன் மணிமண்டப அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வருகை தர வேண்டுகிறோம்.

5 கருத்துகள்:

Govindaswamy சொன்னது…

       S.Govindaswamy,
       34 (73) Guruswami Nagar,
       Bharathiar University,
       COIMBATORE - 641046
       Tel - 0422 2426372
       Email : sgovindaswamy@hotmail.com
 
மருத்துமலை (ஸஞ்ஜீவிபர்வதம்) எங்கேஇருந்தது?
(சு. கோவிந்தசாமி)
 
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்கள் எவை என்று எல்லா அறிஞர்களிடையும் ஒருமித்த கருத்து இல்லை. கீழே குறிப்பிடப் பட்டுள்ள  ஒன்றாம் நூலில் மருத்துமலைப் படலத்தில் மூன்று பாடல்கள்களைப் (8889 - 8891) படித்த பொழுது எனக்கு ஒரு புதிய கருத்து தோன்றியது. ஆதி காவியமாகிய வால்மீகி ராமாயணத்தில் (2ம் நூல்) இப் பகுதிக்குக் கூறப்பட்டுள்ள உரையையும் ஒப்பு நோக்கிப்பார்த்ததில் பெரும் வேறுபாடுகள் காணப் பட்டன. வால்மீகியிலிருந்து கம்பர் பல இடங்களில் வேறுபடுகிறார் என்பது தெரிந்த விஷயம். மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களுக்குக் கூறப்பட்ட பொருள் எனக்கு மன நிறைவைத் தராததால் இப்பகுதிக்கு மற்ற உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருள்களைக் காண்பதற்காக மற்ற நான்கு நூல்களில் இப்பகுதிக்குக் கூறப் பட்டுள்ள பொருள்களையும் ஒப்பு நோக்கினேன்.
 
 1   கம்பராமாயணம் (வர்த்தமானன் பதிப்பகம் - உரை.ஆசிரியர். அ.அறிவொளி)
 2  வால்மீகி இராமாயணம் (வர்த்தமானன் பதிப்பகம் -உ.ஆ- வ.ஜோதி)
3  கம்பராமாயணம் - திருமகள் நிலையம் வெளியீடு (உ. ஆசிரியர்கள்     எம்.நாராயணவேலுப்பிள்ளை, வ.த.இராமசுப்பிரமணியம்,
துரை இராசாராம்)
 4  கம்பராமாயணம் - கம்பன் கழகம் வெளியீடு
 5  ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டம் மூலமும் உரையும் (வர்த்தமானன்   பதிப்பகம் -     உ ஆ. ஜெ. ஸ்ரீசந்திரன்}
 6  கம்பராமாயணம் - அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு
 
அவைகளைப் படித்த பின்பும் பாடல் 8891க்கு முழு விளக்கம் அளிக்கப் படவில்லை என்று  எனக்குத் தோன்றியது. அதன் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
 
இந்திரசித்தனோடு செய்த போரில் பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டு இலக்குவன் மாண்டான் (வான்மீகத்தில் அவன் மயக்கமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது). அதனைக்கண்ட இராமன் மயக்கமடைந்தான். அவர்களை  உயிர்ப்பிப்பதற்காக ஸஞ்ஜீவி மூலிகையைக்கொண்டு வருமாறு அநுமனைச் ஜாம்பவான் (சாம்பன்) பணித்தான்.
 
மருத்து மலைக்குச் செல்லும் வழி வான்மீகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடலைத் தாண்டி வெகு தூரம் சென்றால் இமயமலையை அடையலாம்; அதற்கடுத்து ரிஷபம் என்ற பெயருடைய ஹேமகூடம் (பொற்கூடம்) உள்ளது; அதனையடுத்துக் கைலாசம் என்ற சிகரம் உள்ளது. இவை இரண்டிற்கும் இடையில் பலவிதமான மூலிகைகளைக் கொண்ட ஸஞ்ஜீவி பர்வதம் (மருத்து மலை) உள்ளது.
         
ஒருவருக்குப் புதிய இடத்துக்குச் செல்லும் வழியினைக் கூறும் பொழுது சரியான திசையினையும் தூரங்களையும் கூற வேண்டும். வான்மீகத்தில் இவை விரிவாகக் கூறப் படவில்லை. அநுமனுக்கு முன்பே வழி தெரியும் என்று நாம் கொள்ள வேண்டுமா?
 
கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள வழி பின் காணுமாறு. இந்தக்  கடலைக் கடந்து 9000 யோசனைகள்  சென்றால் இமயமென்னும் குலவரை உள்ளது; அதன் பெருமை (அகலம்) 2000 யோசனைகள்; கடலின் அகலம் 100 யோசனைகள் என்று சம்பாதிப் படலத்தில் கூறப்பட்டுள்ளது. இமயமலையைக் கடப்பதற்கான தூரம் 11100 யோசனைகள் என்றாகிறது.
 
அது “பின் தவிறப் போனால் முன்புள யோசனையெல்லாம் முற்றினை பொற்கூடம் (ஹேமகூடம்) சென்றுறுதி” என்றுளது. முன்புள யோசனை எல்லாம் என்பதற்கு (Ref.No வரிசை எண் 6 ல்) நின் முன்புள்ள என்று பொருள் கூறப் பட்டுள்ளது. இது ஏற்புடையதாக இல்லை. அவனுக்கு முன்புள்ள யோசனைகள் எத்தனை என்று அநுமனுக்கு எப்படித் தெரியும். முன்புள  யோசனை எல்லாம் முற்றினை என்பதற்கு இதற்கு முன்பு கூறப்பட்ட மொத்த  யோசனைகள் என்று பொருள் கொள்ள வேன்டியுள்ளது. அதாவது 100+9000+2000 = 11100 என்று பொருள் கொண்டால் பொற்கூடத்தின் தூரம், 11000 +11100 = 22200 யோசனைகள் ஆகும். அதன் அகலம் கூறப்படவில்லை.
 
ஹேமகூடத்திலிருந்து 9000 யோசனை தொலைவில் நிடதம் என்னும் செம்மலை உள்ளது. நிடதத்தின் தொலைவு 31200 யோசனைகள்.
         
 “இம்மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் செம்மலைக்கும் உளவாய அத்தனை யோசனை கடந்தால் சென்று காண்டி எம்மலைக்கும் பெரிதாய வட மலையை”  என்ற பாடலின்படி; உளவாய அத்தனை என்பதற்கு 9000 யோசனை என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதன்படி மேரு மலையின் தொலைவு 40200 யோசனைகள். தற்காலத்தே நமக்குத் தெரிந்த வரை இமயமலையின் வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் (Arctic Ocean) வரை எந்த ஒரு மலையும் இல்லை. எம்மலைக்கும் பெரிதாய மலை இல்லவே  இல்லை. இமயமலை தான் (Mount Everest) தான் எல்லா மலைகளுக்கும் பெரிய மலை. மேரு என்பது இமயமலை என்ற கருத்தும் நிலவுகிறது. அவ்வாறாயின் கம்பர் ஏன் இவற்றை வெவ்வேறாகக் கூறினார்?

(தொடரும்)

இரண்டாம் பகுதி

Govindaswamy சொன்னது…

என் கட்டுரை அளவில் பெரியதாக இருவ்தது என்று இந்த இடுகை ஏற்றுகொள்ளவில்லை. முழுமையாக இதை எவ்வாறு வலையேற்றம் செய்வது.
என் புதிய மின் அஞ்சல் முகவரியைக் கீழே காண்கவும்.

govindaswamy.s77@gmail.com

Govindaswamy சொன்னது…

மூன்றாம் பகுதி

பின் நிகழ்ந்தது என்ன? முன்பு குறிப்பிட்ட மூன்று பாடல்களை விரிவாக நோக்குவோம். இதனைப் படிப்பவர்களுக்கு உடனே உதவும் வகையில் பாடல்களும் அவற்றிர்க்குக் கூறப்பட்டுள்ள பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பா:1 அத்தடம் கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல்
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், 'விடிந்தது' என்னா 'முடிந்தது என் வேகம்' என்றான்

பொ: அந்த அகன்ற மலையைக் கடந்து மறு பக்கம் சென்றடைந்த அநுமன் (வள்ளல்) உத்தர குருவை அடைந்தான். சூரியன் தன் கதிர்களைச் செலுத்தி, செறிந்த இருளை நீக்கி விளங்கிய செய்கையைக் கண்டு 'விடிந்தது, நான் வந்த வேகம் பயனற்றுப் போயிற்று' என்றான்.

பா:2 ஆதியான் உணரா முன்னம் அரு மருந்து உதவி அல்லின்
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான் உற்றதோ துணிதல் ஆற்றேன்
ஏதுயான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான்

பொ: மூலவனான இராமன் உணர்வதற்கு முன் அரிய மருந்தினைக் கொடுத்து நள்ளிரவிற்கு முன் அவன் அடைந்த துன்பத்தை அகற்ற எண்ணினேன். சூரியன் உதித்தான். நடந்ததைத் தடுக்க முடியாது. நான் என்ன செய்வேன் என்று இணை இல்லாத அநுமன் வருத்தப் பட்டான்.

பா:3 கால் திசை சுங்கச் செல்லும் கடுமையான், கதிரின் செல்வன்
மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன்; வட பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் என்னத்துன்பம் தவிர்த்தனன் தவத்தின் மிக்கோன்.

பாடல் மூன்றினுக்கு நான்கு உரை ஆசிரியர்கள் கூறியுள்ள பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாட்டிற்கு நான் அவர்கள் கூறாத ஒரு விளக்கத்தை பின்னால் கொடுத்துள்ளேன்

பொ:1 தவங்களில் சிறந்தவனும் காற்றும் திசைகளும் பின் தங்குமாறு கடுமையான வேகத்தில் செல்லும் அநுமன் சூரியன் மேற்குத் திசையில் எழ மாட்டானே! இன்னும் விடியவில்லை, மேரு தன் வடபுறத்தே மாற்றித் தோன்றச் செய்வான் என்று சாத்திரம் படித்த அறிஞர்கள் கூறியுள்ளனர் என்று எண்ணி மனக்கவலையை மறந்தான்.

பொ: 2 மேரு மலைக்குத் தெற்கில் கீழ்த்திசையில் உதயமாகும் சூரியன் அவ்வியல்பை மாற்றி அதன் வட திசையில் மேல் திசையில் உதயமாவான் என்பது புராணக் கொள்கை.

பொ:3 தவத்தில் மிக்கவனும் திசை நோக்கிச் செல்லும் காற்றும் சுருங்குமாறு மிக வேகமாகச் செல்லக் கூடியவனுமான அநுமன் பின்னர் ஒருவாறு ஆய்ந்து சூரியன் மேற்குத் திசையில் உதிப்பவன் அல்ல; இப்போது உதிப்பதுவும் அன்று; மேரு மலையின் வட புறத்தில் இருப்பவர்களுக்கு இவ்வாறு திசை மயக்கம் என்பதை மறைகள் வல்லவர்கள் உணர்ந்துள்ளதை எண்ணி மனம் தெளிந்தான்.

பொ:4 காற்றின் வேகம் குறையுமாறும் திசையின் தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனும் தவத்தின் மிக்கவனும் ஆகிய அநுமன், 'கதிரினைச் செல்வமாக உடைய சூரியன் மேற்குத் திசையிலே எழுகின்ற இயல்புடையவன் அல்லன்; போழ்து விடிந்ததோ அன்று; மேருவின் வடபாகத்தே தன் கதியை மாற்றிக் கொண்டவனாய் மேற்கே தோன்றுவான் என்பது வேதம் வல்ல சான்றவர்கள் சொன்னார்கள்' என்று நினந்து துன்பம் தணிந்தான்.

இப்பாடல்களுக்கு என்னுடைய விளக்கம் கீழ்வருமாறு.

மேலே கூறப்பட்டுள்ள நான்கு உரைகளும் ஒத்திருக்கின்றன. ஆனால் வெறும் வார்த்தைக்ளுக்கான பொருள்கள் (literal meanings) மாத்திரம் கொடுத்து விட்டு, கம்பர் கூறிய புதிரை ஆராய்ந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. பின் வரும் கேள்விகளுக்கு (அநுமன் தானே விடையையுணர்ந்து கொண்டானாயினும்) உரையாசிரியர்கள் வளக்கம் கொடுக்கவில்லை.

1 இரவுப்பொழுது இலங்கையை விட்டுப் புறப்பட்ட அநுமன் எப்பொழுது/எங்கே சூரியன் உதிப்பதைப் பார்த்தான்?
2 மேரு எங்கே இருந்தது/இருக்கின்றது?
3 மேரு எங்கே இருந்திருந்தால் அதன் வடபுறம் திசைகள் மாறித் தோன்றும்?
4 எந்த சாத்திரங்களில் இது கூறப்பட்டுள்ளது?

மேலே கூறியவற்றுள் முதல் மூன்றிற்கு எனக்குத்தோன்றிய விடைகளைக் கீழே கூறியுள்ளேன். நான்காவதற்கான விடையைக் காணுமாறு சாத்திரம் வல்லோரை வேண்டுகிறேன்.

மு. பழனியப்பன் சொன்னது…

அன்பு மிக்க ஐயா கோவிந்தசாமி அவர்களுக்கு தங்களின் இனிய கருத்துரையைப் பெற்றோம். தங்களின் முழுக் கட்டுரையை மின்னஞ்சலிடுக. அதனைத் தக்கவகையில் பரிசீலிக்க முயல்கிறோம்.
மு.பழனியப்பன்