சனி, 26 மார்ச், 2011

பட்டி மண்டப அணி 1


கம்பன் திருநாள் மூன்றாம் நாளில் நடைபெற்ற பட்டி மண்டபத்தில் கலந்து கொண்ட மற்றொரு அணியினர்

தினமணிச் செய்தி -பட்டிமண்டபம் 2011


இவ்வாண்டு கம்பன் விழாவில் நடைபெற்ற பட்டிமண்டப விழாவின் சுருக்கத்தைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுச் சிறப்பித்தது. அதன்வடிவம்
இது நன்றி -தினமணிக்கு

திங்கள், 21 மார்ச், 2011

இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே


இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே.

கிருங்கை சேதுபதி

பொதுவுடைமை நெறிநின்று கம்பனைப் புதுவிதமாக அணுகிய இருபெரும் இலக்கிய மேதைகள் தோழர் ஜீவாவும் எஸ்.ஆர்.கே.யும். காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இரு கண்களாய்க்கொண்டு எண்ணம், எழுத்து, பேச்சு என எல்லா நிலைகளிலும் தன்னை நிறுத்திக்கொண்டு சமுதாயப் பிணிகளுக்கு மாற்றுத்தேடிப் போராடிய இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே. என்னும் எஸ்.இராமகிருஷ்ணன்.

தமிழும் ஆங்கிலமும் தாய்மொழிகள் எனப் பிரவகிக்கும் இவரது உரையால், நாட்டரசன்கோட்டையில் பள்ளிப்படைகொண்ட பாட்டரசன் கம்பன் எழுந்துவந்து மில்டனோடு கைகுலுக்கிக் கொண்டது வரலாறு. கால காலத்திற்கும் இந்த உறவு நிலைகொள்ள இவர் முனைந்து எழுதி வழங்கிய ஒப்பீட்டு ஆய்வுக்கு மதுரைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. பி.எச்.டி. பட்டத்தை, "செம்புலமை மெய்க்கீர்த்தி' எனத் தமிழில் சுட்டி, கம்பனடிப்பொடி, எஸ்.ஆர்.கே.யை வாழ்த்தி ஒரு வெண்பா பாடினார்.

பாரதி மரபில் கம்பனோடு வள்ளுவனையும் இளங்கோவடிகளையும் தமது ஆய்வுத்தமிழால் அழகாகப் பதிவுசெய்தார் எஸ்.ஆர்.கே. கூடவே, பல படைப்புகளை மூல நூல்கள் எனக் கொள்ளும் வகையில் தமிழில் திறம்பட மொழிபெயர்ப்புச் செய்தவர்.÷ விடுதலைப்போரில் ஈடுபட்டு மும்முறை சிறைவாசம் ஏற்றவர்: பொதுவுடைமை நெறிதாங்கிப் போராடிய காலத்தில் நான்காண்டுகளுக்கு மேல் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர். வீரம் செறிந்த இவரின் வரலாறு, இந்தியத் தமிழ் இலக்கியப் பொதுமை வரலாறு.

நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கி(ள்)ளிமங்கலம் என்ற சிற்றூரில் வி.கே.சுந்தரம் - மங்களம் தம்பதியருக்கு 1921-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி மகவாகத் தோன்றியவர் எஸ்.ஆர்.கே. ஆரம்பக் கல்வியை மாயவரத்தில் பெற்ற இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இந்திய விடுதலை முழக்கம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த அக்காலத்தில் தமது தோழர் கே.பாலதண்டாயுதத்துடன் விடுதலைப் போராட்டத்தில் களம் இறங்கினார் எஸ்.ஆர்.கே.÷1936-களில் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் விடுதலை முழக்கிய இவர், மார்க்சியத் தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1940-41-இல் காசி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாணவராகச் சேர்ந்தார். அங்கும் மாணவர் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு இயங்கினார். கனல் கக்கும் மொழியில் இந்திய விடுதலை உணர்வை எடுத்துமொழிந்த அவரை உத்தரப்பிரதேச அரசு கைது செய்து காசிச்சிறையில் தள்ளியது. பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றம் பெற்றார். விடுதலைபெற்றும் சில காலம் வீட்டுக்காவலில் வைக்கப் பெற்றார்.

பின்னர், சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தின் தென்மண்டல மாநாட்டில், பங்கேற்ற எஸ்.ஆர்.கே., சம்மேளனத்தின் செயலாளரானார். 1942-இல் திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்ற எஸ்.ஆர்.கே., ஆகஸ்ட் போராட்டத்தில் தீவிரமாக இயங்கினார். பிறகு, படிப்பை உதறிவிட்டு, மாணவர் இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1943 ஜனவரியில் சென்னை சென்றார். ஜனசக்தியில் "தேசபக்தன்', "டைரி', "ஈட்டிமுனை' ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதினார்.

தந்தையார் மறைந்த பின்னர் தம் பங்காக வந்த சொத்தை விற்று, முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே அளித்த எஸ்.ஆர்.கே., அக்கட்சியின் சாதாரண முழுநேர ஊழியனாக, ஒரு சிறு தொகையைப் பெற்றார். அவருடன் இணைந்து களப்பணி ஆற்றிய டாக்டர் கமலா என்பவரைக் காதலித்து, 1944-இல் கரம் பற்றினார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார்.

கட்சியில் முழுநேரப் பணியாற்ற முடியாத நிலையில், 1953-இல் மதுரைக்குக் குடிபெயர்ந்த எஸ்.ஆர்.கே., 1953-இல் பேராசிரியர் சங்கரநாராயணனுடன் இணைந்து தனிப்பயிற்சிக் கல்லூரியில் பணியைத் தொடர்ந்தார். முற்றுப்பெறாது நின்ற தம் பட்டப்படிப்பை முடிக்கும் நோக்கோடு, வடநாட்டில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், நேபாளப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். பின்னர், தமது "கம்பனும் மில்டனும்' ஒப்பீட்டு ஆய்வுக்காக மதுரைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

தாம் பெற்ற அறிவைத் தம்மைச் சார்ந்தவர்களும் பெறுதற்குரிய வழியாகத் தனிப்பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியப்பணி மேற்கொண்டார். சிறந்த பொழிவாளராகவும், சீரிய பத்திரிகையாளராகவும், இனிய மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்த எஸ்.ஆர்.கே.யைப் பெருமைமிக்க பேராசிரியராக உயர்த்தி மதுரை பேறு பெற்றது.

தந்தை நிகர்த்த தோழராகவும் தாயினும் மிக்க அன்புடையவராகவும் மனிதநேய மேருவாகவும் இவர் விளங்கிய பெற்றியை அவர் காலத்து அறிஞர் உலகம் அனுபவித்து உணர்ந்தது; உயர்ந்தது. வடமொழியோடு, தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி, சமகால இலக்கியம் வரை ஆழ அறிந்திருந்த எஸ்.ஆர்.கே., ஜீவாவின் தோழர்; ஜெயகாந்தனின் ஆசான்; எத்தனையோ இலக்கியவாதிகளுக்கு இனிய வழிகாட்டி.

உலக சமாதான இயக்கத்துக்குத் தம்மை முழுமையாய் ஒப்புக்கொடுத்த எஸ்.ஆர்.கே., ஐப்சோவின் தமிழ் மாநிலத் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். உலக சமாதான இயக்கத்தின் சார்பில், 1982-இல் பாரதி நூற்றாண்டுவிழாவை உலகமெங்கும் கொண்டாடப் பெருமுயற்சி மேற்கொண்டார். புதுதில்லியில், 64 நாடுகள் பங்குகொண்ட சர்வதேச பாரதி நூற்றாண்டுவிழாவை சிறப்புற நடத்தினார். அதனை ஒட்டி அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்தான், Bharati: Patriot poet Prophetஅதுசமயம், சோவியத் யூனியன், பின்லாந்து, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஹங்கேரி நாடுகளுக்கெல்லாம் சென்று பாரதியின் புகழைப் பரப்பினார். பிராக், கோபன்ஹேகன் நகரங்களில் நடந்த சர்வதேச சமாதான மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

இவர்தம் நூல்கள், வள்ளுவன் கண்ட வாழ்வியல், திருக்குறள் - ஒரு சமுதாயப் பார்வை, திருக்குறள் ஆய்வுரை, இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு, கம்பனும் மில்டனும், கம்பனும் ஷேக்ஸ்பியரும் என்று அற்புத நூல்களை ஆக்கித்தந்தார். The Epic Muse: The Ramayana And Paradise Lost என்ற ஆங்கில நூலையும் படைத்தளித்தார். சீதை குறித்து, "கற்பின் கனலி' என்றும், வாலி குறித்து, "சிறியன சிந்தியாதான்' என்றும், கம்பன் கண்ட அரசியல், கம்பசூத்திரம் ஆகிய நூல்களையும் ஆய்வுலகுக்கு வழங்கினார். ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றையும், மார்க்சியப் பொருளாதாரப் பார்வையும் இவர் அளித்த தமிழ்க் கொடைகள். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினி பாமி தத் எழுதிய India Today என்னும் ஆங்கில நூலைத் தமிழில் "இன்றைய இந்தியா' என்று வழங்கினார். ரஷ்ய எழுத்தாளர் ஆஸ்திரோவ்ஸ்கி இருபாகங்களாக எழுதிய How the Steel was Tempered என்ற நாவலைத் தமிழில் "வீரம் விளைந்தது' என்ற தலைப்பில் தந்தார். "பள்ளித்தோழன்' என்பது இவர்தம் இன்னொரு மொழிபெயர்ப்பு நூல்.

வடக்கும் தெற்கும் அரசியல் நோக்கில் பகைமை வளர்க்கும் எதிர்முனைகளாகக் கருதப்பட்ட காலத்தில், சமயவாழ்வில் வடக்கும் தெற்கும், இந்தியப் பண்பாடும் தமிழரும் என்று இருபெரும் நூல்களை எஸ்.ஆர்.கே. எழுதினார்.

1983-இல் பார்க்கின்சன் என்னும் நோய் அவரைத் தாக்கியபோதிலும், கணினியின் துணைகொண்டு ஆள்காட்டி விரலால் தட்டித் தட்டித் தம்படைப்புகளைத் தமிழுலகுக்குத் தந்தார். தனக்கு வந்த நோயின் கூறு பற்றியும் அதற்கான சிகிச்சை குறித்தும், அமெரிக்கப் பயணத்தின்போது அங்குள்ள நூல்களைப் படித்துப் புரிந்துகொண்ட அவர், மருத்துவரான தம் துணைவியாரோடு இணைந்து "உங்கள் உடம்பு', "நமது உடல்' ஆகிய உடலியல் தொடர்பான அறிவியல் நூல்களையும் படைத்தளித்திருக்கிறார். பாரதிதாசனைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமலேயே, 1995-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பயணப்படி பெறாமல் சொல்மாலை சூட்ட, நாட்டரசன்கோட்டைக்கு வரும்போதெல்லாம், கம்பநாடனுக்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து மணமிக்க ரோஜா மலர்மாலை கொண்டுவந்து அணிவிக்கும் எஸ்.ஆர்.கே.யின் நினைவு கம்பநேயர்களுக்குள் எப்படி எழாமல்

இருக்கும்? இன்று நாட்டரசன்கோட்டையில் கம்பன் விழா.
நன்றி தினமணி தமிழ் மணி 20 .03 . 2011

நாட்டரசன் கோட்டை - கம்பன்திருநாள் விழா


நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற கம்பன் அடிப்பொடி நினைவுக் கம்பன்திருநாள் விழாவில் அடிகளார் பேசிய பேச்சின் வடிவம் இது.

செவ்வாய், 15 மார்ச், 2011

தேரெழுந்தூர் கம்பன் விழா பட்டிமண்டபம்


சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று அதாவது 13.03.2011 அன்று மாலை 6.30 மணி அளவில் தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் கம்பன் விழாவின் இரண்டாம் நிகழ்வான பட்டிமண்டபம் நடைபெற்றது

இதில் நடுவாராக இருந்து திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் இருந்து நடத்தித்தந்தார்கள். இதில் மு. பழனியப்பன், சுமதிஸ்ரீ, அருணன், இரா.இராமசாமி, பாரதி, சிதம்பரம் ஆகியோர் உரையாற்றினர்
வஞ்சனையில் விஞ்சியவர் கூனியா, சூர்ப்பனகையா என்ற தலைப்பில் விஞ்சியது சூர்ப்பனகையே

புதன், 9 மார்ச், 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த கம்பராமாயண உரைத்தொகுதிகள் மீண்டும் மறுபதிப்பு ஆகியுள்ளன.


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த கம்பராமாயண உரைத்தொகுதிகள் மீண்டும் மறுபதிப்பு ஆகியுள்ளன. வேண்டுவோர் மேற்கண்ட இணைப்பினைப் பாருங்கள்

செவ்வாய், 8 மார்ச், 2011

காரைக்குடியில் கம்பன் திருநாள் 2011








கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து காரைக்குடியில் எழுபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா மார்ச் மாதம் 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழக அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொள்ளுகின்றனர்.
நிகழ்ச்சி விபரம் வருமாறு
மார்ச் 17 - கம்பன் மணி மண்டபம் காரைக்குடி மாலை 5.30மணி

தலைவர் சிவ சத்தியமூர்த்தி
வரவேற்புரை- கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- உயர் நீதி மன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்கள்
அறக்கட்டளை பொழிவுரை- ச. சிவகாமி - கம்பன் காட்டும் உறவும் நட்பும்
திருமிகு எஸ். என் குப்புசாமி, நா நஞ்சுண்டன் ஆகியோருக்குக் கம்பன் சீர் பரவியப் பெருமை கருதி பாராட்டப் பெறுகிறது.பாராட்டினைச் செய்பவர் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்

கம்பனில் திருமுறைகள் என்ற நூலும் இவ்விழாவில் வெளியிடப் பெறுகிறது. இந்நூலை எழுதியவர் பேராசிரியர் சபா. அருணாசலம் ஆவார்.

18.3.2011 அன்று மாலை 5.30 மணி
கம்பன் மணி மண்டபம்
இவ்விழா தனித்த சிறப்புடையது. அகவிழி (புறவிழிக்குறைவினை அகவிழியால் மாற்றுத் திறனாக்கிக் கொண்டவர்கள்) அறிஞர்கள் அரங்கமாக இது புதுமைபட மிளிர்கிறது. இப்படி ஒரு அரங்கம் தமிழகத்திற்கே புதுமை. முதன்மை. இவ்வரங்கின் தலைமை சென்னை நந்தனம் கல்லூரிப் பேராசிரியர் திரு. ந. சேசாத்திரி அவர்கள்
இவரின் கீழ் கம்பனில் பாத்திரமும், பாத்திறமும் ஓங்கி நிற்பது என்ற பொதுத்தலைப்பில் திரு. மா. உத்திராபதி சுமித்திரையே என்றும், திரு ஆ. நாராணசாமி விசுவாமித்திரரே என்றும் திரு. எம் துரை அவர்கள் குகனிலே என்றும் திரு. கு. கோபாலன் அவர்கள் வீடணனிலே என்றும் திருமதி சே. அன்னப் பூரணி அவர்கள் மண்டோதரியிலே என்றும் வாதிட உள்ளனர்.

19.3.2001 அன்று மாலை 5.30 மணி
கம்பன் மணி மண்டபம்
பட்டி மண்டபம்
நடுவர் கலைமாமணி சோ. சத்தியசீலன் அவர்கள்
பொருள் பாத்திரப் படைப்பில் கம்பனைப் பாடாய்ப்படுத்திய பாத்திரம்

கைகேயியே
திருவாளர்கள் த. இராஜாராம், செல்வி ம. சர்மிளா தேவி, மு. பழனியப்பன், கே. கண்ணாத்தாள்
வாலியே
திருவாளர்கள் அ. அறிவொளி. வீ. பிரபா, இரா. மாது, திருமதி ரேவதி சுப்பிரமணியன்

கும்பகருணனே
திருவாளர்கள் வே. சங்கரநாராயணன், செல்வி எஸ்.விஜி, இரா. இராமசாமி, சுமதிஸ்ரீ

என்ற நிலையில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது.

20.3.2011
நாட்டரசன் கோட்டை
மாலை 5.30 மணி
கம்பன் அருட்கோயில்
தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்
வரவேற்புரை கண. சுந்தர்
நயம்மலி நாடக அணி - திரு. அ. அ ஞான சுந்தரத்தரசு
கலைமலி கற்பனை - திரு. சொ. சேதுபதி
இனிமைமலி சொல்லாட்சி திரு. மா. சிதம்பரம்
இறைமலி ஈற்றடி- செல்வி இரா. மணிமேகலை
நன்றியுரை திரு. நா. மெய்யப்பன்
அனைவரும் வருக கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்

காரைக்குடியில் கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டு விழா


காரைக்குடியில் கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டு விழா (2011) வ்ரும் மார்ச் 17ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதுபற்றிய விபரங்கள் படத்தைச் சொடுக்கினால் விரியும்

புதன், 2 மார்ச், 2011

தேரெழுந்தூர் கம்பன் விழா(மார்ச் ௧௨-௧௩ ) 2011 அழைப்பிதழ்




கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் விழா நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.

12 ஆம் தேதி நிகழ்வுகள்

மாலை ஆறு மணிக்குத் தொடங்கவுள்ள இந்த விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியில் துறைத் தலைவர், மற்றும் மொழிப் புல முதன்மையர் பொறுப்புகளை வகித்து வரும் திரு. பழ. முத்துவீரப்பன் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள். திருமிகு த. அகர முதல்வன் அவர்கள் தொடக்க உரையாற்ற உள்ளார்கள். கம்பனில் இஸ்லாமியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையை திரு. மு. சாயபஜ மரைக்காயர் அவர்கள் வழங்க உள்ளார்கள்.
வரவேற்புரையை திரு. சீ சௌந்தரராஜன் அவர்கள் வழங்குகிறார். அறிமுகவுரையை கம்பன்அடிசூடி வழங்குகிறார். நன்றியுரைக்க திரு. மு. அ பசீர் அகமது அவர்கள் வருகிறார்கள்.

13 ஆம் தேதி நிகழ்வுகள் மாலை 6 மணி

பட்டி மண்டபம் இன்று நடைபெறுகிறது. திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் நடுவராக விளங்க உள்ளார். பட்டி மண்டபத்தின் தலைப்பு வஞ்சனையில் விஞ்சியவர் யார் என்பதாகும். இதில் கூனியே என்ற தலைப்பில் திருவாளர்கள் சொ. சேதுபதி, சுமதிஸ்ரீ, மு. பழனியப்பன் ஆகியோரும், சூர்ப்பனகையே என்ற தலைப்பில் திருவாளர்கள் இரா. இராமசாமி, பாரதி பாபு, ம. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

விழாவிற்கு அ. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றவும், திரு. மு. ஜானகிராமன் நன்றிஉரைக்கவும் உள்ளனர்.

கம்பன் சீர் பரவும் அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தொடர்பி்ற்கு

04364-237573

காரைக்குடி
9445022137


தேரெழுந்தூருக்கு மயிலாடுதுறையில் இருந்துப் பேருந்துகள்செல்லுகின்றன.
கம்பன் பிறந்த இடத்தில் கம்பனைக் கேட்க வாருங்கள்.